×

பெரம்பலூர், அரியலூரில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் மறியல்

பெரம்பலூர், ஜன. 25:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 5,150 பேர் கைது செய்யப்பட்டனர். 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3வதுநாள் போராட்டமாக பெரம்பலூர் பாலக்கரையில் ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பினர் சாலைமறியல் செய்தனர். இதையொட்டி 600 பெண்கள் உள்பட 1,150 பேர் கைது செய்யப்பட்டனர்.பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 22ம் தேதிமுதல் வேலைநிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்நாளான 22ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பினர் 2ம் நாளான 23ம் தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு பாலக்கரை செல்லும் சாலை, தேசிய நெடுஞ்சாலைக்கான இணைப்புச்சாலை ஆகியவற்றின் சந்திப்பில் அமர்ந்தும், பிறகு பாலக்கரைக்கு சென்றும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 580 பெண்கள் உள்பட 1035 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் 3ம் நாளான நேற்று(24ம் தேதி) பாலக்கரை ரவுண்டானா பகுதியில் ஆயிரக்கணக்கானோர் இருவழிச் சாலைகளை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தயாளன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அருள்ஜோதி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கவியரசன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ராமர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
     தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் வெங்கடேசன், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார், பதவி உயர்வுபெற்ற முதுநிலை பட்டதாரிஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் கமலக் கண்ணன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் மாவட்டப் பொறுப்பாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட 36 சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
மறியலில் ஈடுபட்ட 600 பெண்கள் உள்பட 1,150 பேரை டிஎஸ்பி ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்ட போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர்.
கைது செய்யப்பட்டு துறைமங்கலத்தில் திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பினரை முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கை பரப்பு செயலாளருமான ராசா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, நகர செயலாளர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
 அரியலூர்:  அரியலூர் அண்ணா சிலை முன் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய 4 தாலுகாவிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒன்று கூடினர். இதையடுத்து 4,000க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று அரியலூர் பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 4,000 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மற்றும் ஊராட்சி துவக்கப்பள்ளிகளில் பணியாற்றும் 2,005 ஊழியர்களில் 1,620 ஊழியர்கள் பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சத்துணவு மற்றும் ஊராட்சி பள்ளிகளில் 80 சதவீதம் பூட்டப்பட்டுள்ளது. இதேபோல் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாததால் பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அரசு கலைக்கல்லூரி பேராசியர்களும் 2 நாட்களாக பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

Tags : Zakat Geo Confederations ,Perambalur ,Ariyalur ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் பாடாலூரில்...