×

டூவீலர்களில் பொருத்தியுள்ளனர் காதை செவிடாக்கும் ஏர்ஹாரன்கள்

மானாமதுரை, ஜன.24: டூவீலர்களில் பொருத்தப்பட்டுள்ள ஏர்ஹாரன்களால் சிறுவர்கள், முதியவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து போலீசார் ஏர்ஹாரன் பயன்படுத்துவதை தடை செய்வதில் மெத்தனமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மானாமதுரை நகரின் மத்தியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளன. மானாமதுரை நகரில் டூவீலர்கள் வைத்துள்ள இளைஞர்கள் சிலர் ஆர்வம் மிகுதியால் அதிக விலை உள்ள ஏர்ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர். மற்றவர்களை ஈர்ப்பதற்காக நாய் குரைப்பது, குழந்தை அழுவது, ஆம்புலன்ஸ் சைரன் ஒலிப்பது போன்ற ஹாரன்களை வாகனங்களில் பொருத்தியுள்ளனர்.
திடீரென ஒலிக்கப்படும் ஹாரனால் மக்கள் பீதி ஏற்பட்டு நடுரோட்டில் விழும் நிலை ஏற்படுகிறது. விதிகளை மீறி தனியார் டூவீலர்கள், தனியார்பஸ்கள், கார், வேன்களிலும் இவற்றை பொருத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நெரிசல் மிகுந்த ரோடுகளில் அதிக ஒலியை ஏற்படுத்தி நடந்து செல்பவர்கள், பிற வாகன ஓட்டிகளின் கவனத்தையும் சிதற வைக்கின்றனர். இவற்றிலிருந்து வரும் இரைச்சல் பொதுமக்களின் காதுகளை செவிடாக்கும் வகையில் இருப்பதால் உடல்நிலை பாதிக்கப்படுவதோடு மனதளவில் பாதிப்பினையும் ஏற்படுத்துகிறது. இதனால் நரம்புத்தளர்ச்சி, ரத்தக்கொதிப்பு, தூக்கமின்மை, மனநோய், இருதய ரத்தநாள அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர் சங்கர் கூறுகையில், ‘‘போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள ரோடுகளில் டூவீலர்களில் இருந்து வரும் அதிக இரைச்சலால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மனிதனின் காது அதிகபட்சமாக 100 டெசிபல் அளவு ஒலியை மட்டுமே கேட்கக்கூடியது. ஆனால் வாகனங்களில் வெளிவரும் அளவு 120 முதல் 150 டெசிபல் வரை அதிகமாக உள்ளது. இதனால் சிறுவர்களுக்கும், முதியோர்களுக்கும் செவிப்பறை கிழிந்து காதுகேளாமை ஏற்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக சப்தத்தை கேட்கும்போது கர்ப்பிணிகளின் கரு கலைந்து போகக்கூடும். குழந்தைகள், பெரியவர்கள் மூளைத்திறன் தற்காலிகமாக செயல் இழக்கவும் வாய்ப்பு உள்ளது. பயணிகளின் காதை பிளக்கும் ஏர்ஹாரன்கள் அதிகரித்து வருவது குறித்து போக்குவரத்து போலீசார் சோதனை செய்வதில்லை. விதிகளை மீறுவோர்க்கு ரூ.500 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமிருந்தாலும் இவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே சிவகங்கை எஸ்.பி பொதுமக்களை பயமுறுத்தும் ஏர்ஹாரன் பொருத்தியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : tweeers ,
× RELATED டூவீலர்கள் மோதல்