×

குடிநீரின்றி ராயபாளையம் காலனி மக்கள் தவிப்பு

திருமங்கலம், ஜன. 25: குழாய்கள் உடைந்து காட்சிபொருளாக மாறிவிட்டதால் மேல்நிலைத்தொட்டியில் தண்ணீர் ஏற்றமுடியாமல் குடிநீர் இன்றி ராயபாளையம் காலனி மக்கள் கடந்த 5 மாதத்திற்கு மேல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருமங்கலம் அருகேயுள்ள ராயபாளையம் கிராமத்தையொட்டி உள்ளது ஆதிதிராவிடர் காலனி. சுமார் 150க்கும் அதிகமானோர் குடியிருந்து வருகின்றனர். ராயபாளையம் கிராமத்திற்கு காவிரிகூட்டுக்குடிநீர்த்திட்டத்தில் தண்ணீர் வருகிறது. ஆனால் அருகேயுள்ள காலனிக்கு குழாய்கள் பதிக்காததால் இந்த தண்ணீர் வருவதில்லை. இங்குள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி பழுதடைந்துள்ளது.
மேல்நிலைத்தொட்டிக்கு செல்லும் குழாய்கள் அனைத்து துருபிடித்து ஓட்டைவிழுந்ததால் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால் கடந்த 5 மாத்திற்கு மேலாக ராயபாளையம் காலனி மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை உண்டாகியுள்ளது. கிராமத்திற்குள் வந்து வரிசையாக நின்று தண்ணீர் பிடிக்க வேண்டியுள்ளது. பொதுமான தண்ணீர் கிடைக்காததால் காலனி பொதுமக்கள் வயல்வெளிகளில் சென்று தண்ணீர் எடுக்கும் அவலநிலை தொடர்கிறது.
இதேபோல் காலனியில் வாறுகால் வசதிகள் எதுவும் ஊராட்சி சார்பில் செய்து தரப்படவில்லை. எனவே சாக்கடை கழிவுநீராக பெருக்கெடுத்து தெருக்களில் ஓடுவதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இதனால் ராயபாளையம் காலனி மக்களுக்கு அடிக்கடி காய்ச்சல், வாந்தி உள்ளிட்டவை உண்டாகி அவதிக்குள்ளாகி வருகின்றனர். தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் தெருக்களில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஒன்றிய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என ராயபாளையம் காலனி மக்கள் தெரிவித்தனர். குடிநீர் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Raipalayam ,
× RELATED ராயபாளையம் சத்ய யுக சிருஷ்டி கோயிலில்...