×

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் சிஇஓவிடம் மனு

கிருஷ்ணகிரி, ஜன.24:  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கோபி தலைமையில் நிர்வாகிகள், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம்  கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பறக்கும் படை உறுப்பினர்களாக பணியாற்றிய முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பிழைப்பூதிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சென்ற ஆண்டு நடந்த 11ம் வகுப்பு செய்முறைத் தேர்வில் அக மற்றும் புற மதிப்பீட்டு உழைப்பூதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பிப்ரவரி மாதம் தொடங்க உள்ள 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வில் முதுகலை ஆசிரியர்களை தேர்வாளர்களாக நியமனம் செய்யும் போது, தொலைதூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு நியமனம் செய்யப்படுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.  செய்முறை தேர்வில் முதுகலை ஆசிரியர்கள் புறத் தேர்வாளர்கள் நியமனத்தின் போது ஒரு சில ஆசிரியர்களையே அதிகமான பள்ளிகளுக்கு நியமனம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், செய்முறை தேர்வுக்கு முதுதுகலை ஆசிரியர்களை புறத்தேர்வாளர்களாக நியமனம் செய்யும்போது, கடந்த ஆண்டு அவர்கள் புறத்தேர்வாளர்களாக பணியாற்றிய பள்ளிக்கு மீண்டும் நியமனம் செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும். மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அதிகம் உள்ள பெரிய பள்ளிகளில் கூடுதலாக அகத்தேர்வாளர் மற்றும் புறத்தேர்வாளர்களை நியமிக்க வேண்டும். செய்முறை தேர்வுப் பணியில் ஈடுபடும் முதுகலை ஆசிரியர்களுக்குரிய உழைப்பூதியத்தினை தேர்வு முடிகின்ற நாளன்றே சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புறத்தேர்வாளர் நியமனத்தின் போது ஒரு முதுகலை ஆசிரியர், ஒரே நேரத்தில் இரண்டு பள்ளிகளுக்கு நியமனம் செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, மாவட்ட செயலாளர் கார்த்திக், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட அமைப்பு செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட தலைமையிடச் செயலாளர் வேந்தன், மாவட்ட துணைத் தலைவர்கள் முருகன், செஞ்சி, மாவட்ட தணிக்கையாளர் லோகராஜா, மகளிரணி செயலாளர் உமா, மாவட்ட இணைச் செயலாளர் காளியப்பன், மாவட்ட பிரச்சார செயலாளர் சத்தியகுமார், கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் வீரபத்திரன், சிவப்பிரகாசம், கோட்டீஸ்வரன், சேட்டு, மாதேசன், செந்தில் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் உடனிருந்தனர். 

Tags : Senior ,Graduate Editorial Board Administrators ,CEO ,
× RELATED முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த...