சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 17 ஆண்டு சிறைதண்டனை

திருப்பூர், ஜன.24:  திருப்பூரில் பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட் தீர்ப்பளித்தது. இதற்கு உடந்தையாக இருந்த மற்றொருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (40). இவர் திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே அமராவதிபாளையத்தில் உள்ள அட்டைகம்பெனியில் தங்கி வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில், வடமாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் தங்கி பணியாற்றி வந்தனர். அக் குடும்பத்தில் உள்ள 12 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந் நிலையில், கடந்த 2015ம் ஆண்டு பிப்.3ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமியை பாலகிருஷ்ணன் உடுமலைக்கு கடத்தி சென்று, அங்குள்ள தனது உறவினரான சின்னமாரிமுத்து (38) என்பவரது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
 இதுகுறித்த புகாரின் பேரில், காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் பாலகிருஷ்ணன், சின்னமாரிமுத்து மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.இந்த வழக்கு திருப்பூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பாலகிருஷ்ணனுக்கு பாலியல் வன்கொடுமைக்கு 10 ஆண்டுகள், ஆள்கடத்தலுக்கு 7 ஆண்டுகள் மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதமும், சின்னமாரிமுத்துவுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்திற்காக 10 ஆண்டுகள் மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

× RELATED உறுதி மொழியை மீறிய வாலிபருக்கு 217 நாள் சிறை