×

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மணல் கடத்தி செல்லும் லாரிகள் சிவகங்கை போலீசில் சிக்கித்தவிப்பு அதிகாரிகள் துணை போவதாக குற்றச்சாட்டு

திருமயம், ஜன. 24: புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மணல் கடத்தி செல்லும் லாரிகளை அலற விடும் சிவகங்கை மாவட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மணல் கடத்தல்காரர்களுக்கு துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, ஆவுடையார்கோவில் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசனம் வழங்கும் முக்கிய ஆறுகளாக பாம்பாறு, வெள்ளாறு, குண்டாறு உள்ளது. இதில் திருமயம், புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி தாலுகாவை பிரிக்கும் எல்லைபோல் வெள்ளாறு உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டுக்கு ஒரு முறையாவது ஆறுகளில் நீரோட்டம் இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் மழையளவு குறைந்து வறட்சி நிலவுவதால் கால்நடைகள் குடிக்க கூட நீரில்லாமல் ஆறுகள் வறண்டு போனது.தமிழகத்தில் கட்டுமானங்கள் அதிகரித்ததால் ஆறுகளில் மணல் திருடுவது அதிகரித்தது.  இதனிடையே தமிழக அரசு, ஆற்று மணல் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்த முடிவு செய்தது. அதன்பின்னர் பாம்பாறு, வெள்ளாற்றில் மணல் திருடுவது அதிகமானது. இதற்கு அரசு நடத்தும் குவாரிகளில் இருந்து மணல் தாமதமாகவும், குறைந்த அளவே கிடைத்ததே காரணமாகும். இதனால் கட்டிடம் கட்ட மணல் தேவை அதிகரித்ததை தொடர்ந்து அரிமளம், திருமயம் பகுதிகளில் உள்ள ஆறுகளில் இருந்து இரவு நேரங்களில் மணல் எடுக்க துவங்கினர். இதன்மூலம் பல லட்சம் வருவாய் கிடைத்ததால் ஆற்றை ஒட்டியுள்ள அரசியல், பண செல்வாக்கு உள்ள பிரமுகர்கள் ஆற்றை கைப்பற்றி அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட துவங்கினர்.

மணல் திருட்டு பெரும்பாலும் நள்ளிரவு துவங்கி அதிகாலை நேரங்களில் அதிகளவு நடக்கிறது. இதனால் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள ஆறுகள் இரவு நேரமானால் தொழிற்சாலைபோல் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு லாரி மூலம் கடத்தப்படும் மணல், முக்கிய சாலை வழியாக செல்லாமல் கிராம சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அப்போது மணல் லாரிகளை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்களை அந்தந்த ஊரில் உள்ள அரசியல் பிரமுகர்களை கொண்டு வாயடைக்க வைக்கின்றனர். மேலும் மணல் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. மணல் கடத்தலை தடுக்கும்போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம் என அதிகாரிகள் அஞ்சி மணல் கடத்தலை கண்டு கொள்வதில்லை என்று கூறப்பட்டாலும் மாவட்ட நிர்வாகம், அதிகாரிகளின் அலட்சியமே மணல் கடத்துவதுக்கு முக்கிய காரணம் என்று அரிமளம், திருமயம் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரிமளம் பகுதி  விவசாயிகள் கூறுகையில், ஆறுகளில்  இருந்து மணல் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு தெரியாமலா இருக்கும். மேல்  அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கும்போது அத்தி பூத்ததுபோல் அதிகாரிகள்  திடீரென சோதனை நடத்தி ஒரு சில மணல் கடத்தல் லாரிகளை பிடித்து கணக்கு காட்டி விட்டு செயலற்று விடுகின்றனர். மணல் கடத்தலில் ஈடுபடும்  100 லாரிகளில் ஓரிரு லாரிகளை பிடித்து விட்டால் மணல் கடத்தல் நின்றுவிட  போவதில்லை. இந்நிலையில் திருட்டுத்தனமாக ஆற்றில் மணல் அள்ளி அதை வேறு மாவட்டத்தில் விற்பனை செய்வது வருத்தமளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம், மணல்  கடத்தலில் ஈடுபடுவர்களை தடுக்க நேர்மையான அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைத்து மணல் கடத்தலால் பிடிபடும் லாரி மற்றும் டிரைவர்களின் உரிமங்களை  உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற கடுமையான தண்டனைகள் கொடுப்பதன் மூலம் மணல் திருட்டை தடுக்க முடியும் என்றனர்.சோதனைச்சாவடியில் தொடர் சோதனை திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, ஆவுடையார்கோவில் தாலுகா பகுதியில் உள்ள ஆறுகளில் இருந்து பெருமளவு மணல் கடத்தப்படுகிறது. இவ்வாறு திருடப்படும் மணல்கள் லாரி மூலம் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்கிறது. இதில் முக்கிய வழியாக அறந்தாங்கி- காரைக்குடி, புதுக்கோட்டை- மதுரை, காரைக்குடி சாலைகள் உள்ளன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து புதுக்கோட்டை பகுதியில் இருந்து செல்லும் வாகனங்களை தொடர் சோதனை செய்கின்றனர்.

100 லாரிகள் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு, பள்ளத்தூர், புதுவயல்- சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புதுக்கோட்டையில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்து வந்ததாக 100க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மணல் கொள்ளையர்கள் சிவகங்கை பகுதிக்கு மணல் எடுத்து செல்ல அஞ்சுகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள கே.புதுப்பட்டி, அரிமளம், திருமயம் போலீஸ் நிலையத்தில் ஒரு மணல் கடத்தல் லாரிகள் கூட பிடிபடாதது வேடிக்கையாக உள்ளது. அப்படியே மணல் கடத்தல் லாரிகளை அதிகாரிகள் பிடித்தாலும் ஒரு வாரத்துக்குள் அரசியல்வாதிகளின் செல்வாக்கை பயன்படுத்தி விடுவிக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து முழுநேர வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Sewagangai ,police looters ,district ,Pudukottai ,
× RELATED கந்தர்வகோட்டை வட்டாரத்தில் மண் பரிசோதனை செய்ய விவசாயிகள் அழைப்பு