×

வீரவநல்லூர், கீழப்பாவூர், நாங்குநேரி, ஆழ்வார்குறிச்சியில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய மின் மோட்டார்கள் பறிமுதல்

வீரவநல்லூர், ஜன.24: வீரவநல்லூர் பேரூராட்சியில் வீடுகளில் விதிமுறைகளை மீறி குடிநீர் உறிஞ்சப்படுவதாக பேரூராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு புகார் வந்தன. இதனையடுத்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹீன் அபுபக்கரின் உத்தரவின்படி செயல் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான பேரூராட்சி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று சோதனை நடத்தினர். இதில் விதிமுறைகளை மீறி குடிநீர் உறிஞ்சப்பயன்படுத்தப்பட்ட 12 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதே செயலில் ஈடுபடுபவரின் குடிநீர் இணைப்புகள் நிரந்தரமாக துண்டிக்கப்படும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதில் சுகாதார மேற்பார்வையாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பாவூர்சத்திரம்:  கீழப்பாவூர் பேரூராட்சி பகுதிகளில் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் சட்டத்திற்கு விரோதமாக அத்துமீறி குடிநீர் உறிஞ்சப்படுகிறதா என கீழப்பாவூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கண்மணி தலைமையில் அலுவலர்கள் ஜவகர், தர்மராஜ், தனுஷ்கோடி, முத்துசாமி, பெருமாள், குமார் மற்றும் குடிநீர் திட்ட பணியாளர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 19 வீடுகளில் சட்டத்திற்கு விரோதமாக குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பயன்படுத்தி நீரை உறிஞ்சுவது தெரிய வந்தது. இதனையடுத்து 19 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் பொது மக்கள் தாங்களாகவே முன்வந்து குடிநீர் இணைப்புகளில் பொருத்தியுள்ள மின் மோட்டார்களை அகற்ற வேண்டும் என நிர்வாக அதிகாரி எச்சரித்துள்ளார்.

நாங்குநேரி:  நாங்குநேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி செயல்அலுவலர் குமரேசன் தலைமையிலான குழுவினர் 6,7,8,10,11 ஆகிய வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது  அனுமதியின்றி பொருத்தப்பட்ட 5 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். மேலும் தொடர் நடவடிக்கை மூலம் சட்டவிரோத மின் மோட்டார்களை கண்டறிந்து பறிமுதல் செய்யப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடையம்: ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சாந்தி தலைமையில் கிளார்க் குமார், குடிநீர் திட்ட பணியாளர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 5 வீடுகளில் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பயன்படுத்துவது தெரியவந்தது. இதனையடுத்து 5 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். மேலும் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும் . எனவே பொது மக்கள் தாங்களாகவே முன்வந்து மின் மோட்டார்களை அகற்ற வேண்டும் என நிர்வாக அதிகாரி சாந்தி கேட்டுக்கொண்டார்.

Tags : Veeravanallur ,Kelappavur ,Nanguneri ,Alwararkurichi ,
× RELATED நெல்லை அருகே உரிய ஆவணமின்றி பைக்கில் கொண்டுசென்ற ரூ.60 ஆயிரம் பறிமுதல்