×

சரியாக ஊதியம் வழங்காததால் நெம்மேலி கடல் நீர் திட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம்

திருப்போரூர், ஜன.24: சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படும் வளாகம் உள்ளது. இங்கு நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தென்சென்னைக்கு வழங்கப்படுகிறது. இந்த பணி தனியார் நிறுவனத்தால் ஒப்பந்த அடிப்படை யில் செய்யப்படுகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.  

இதுகுறித்து ஒப்பந்த நிறுவனத்தில் முறையிட்டும் பலனில்லை. இந்நிலையில் கடந்த தீபாவளிக்கு பிறகு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்தனர். ஆலை வளாகத்திற்கு வெளியே நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என நிர்வாகம் அறிவித்தது. ஆனால் போராட்டத்தைக் கைவிட ஊழியர்கள் மறுத்தனர். இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணிகள் பாதிக்கப்பட்டது. போராட்டம் தொடர்ந்தால் தென்சென்னை குடிநீர் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து ஓரிரு நாளில் மாத ஊதியம் வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு பணிக்குத் திரும்பினர்.    

Tags : strike ,Nemmeli Sea Water Project Strikers ,
× RELATED செங்கல்பட்டில் ரயில் மறியல்: விவசாயிகள் கைது