×

ஆவடி ஓ.சி.எப் தொழிற்சாலை பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆவடி, ஜன.24: பாதுகாப்புத்துறை உற்பத்தியை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்தும், பறிக்கப்பட்ட பென்ஷனை திரும்ப வழங்க கோரியும் ஆவடி படைத்துறை உடை தொழிற்சாலை (ஒ.சி.எப்) முன்பு 2ஆயிரம் பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.   பாதுகாப்புத்துறை உற்பத்தியை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்தும், பறிக்கப்பட்ட பென்ஷனை திரும்ப வழங்க கோரியும் நாடு முழுவதும் 4லட்சம் பாதுகாப்பு துறை ஊழியர்கள் நேற்று முதல் 25ம் தேதி வரை நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பணிபுரியும் 12ஆயிரம் பாதுகாப்புத் துறை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ளனர். இதன் ஒரு  பகுதியாக, அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் ஆவடி அனைத்து பாதுகாப்புத்துறை தொழிற்சங்கங்கள் போராட்ட குழு சார்பாக ஆவடி படைத்துறை உடை தொழிற்சாலையின் (ஒ.சி.எப்)  முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     இதற்கு அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் குமார் தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு துறை ஊழியர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  

போராட்டத்தில் அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம், இந்திய தேசிய டிஃபன்ஸ் தொழிலாளர்கள் சம்மேளனம், பாரதிய பிரதிக்ஷா மஸ்தூர் சங்கம், அண்ணா தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து, ஆவடியில் உள்ள பாதுகாப்பு துறை தொழிற்சாலைகளில் ஏராளமான ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Avadi OCF Factory Defense Department ,
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை