×

கத்திவாக்கத்தில் 2 ஆண்டாக பூட்டிக்கிடந்த உடற்பயிற்சி கூடம் பயன்பாட்டிற்கு திறப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 2வது வார்டு கத்திவாக்கம் பஜார் தெரு அருகே மாநகராட்சி வணிக வளாகத்தில் நவீன உடற்பயிற்சி மையம் கடந்த 2016ம் ஆண்டு திறக்கப்பட்டது. திறப்பு விழா நடைபெற்றதே தவிர பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி வாலிபர்கள் உடற்பயிற்சி செய்ய இடமில்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து கடந்த 21ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கோவிந்தசாமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் வணிக வளாகத்துக்கு வந்தனர்.

அங்கு இரண்டு ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த உடற்பயிற்சி மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்ததோடு அதன் அருகில் இருந்த செடி, கொடி மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த உடற்பயிற்சி மையம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படுகிறது. இங்கு வாலிபர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான அனைத்து உபகரணங்களும் ஒரு சில தினங்களில் பொருத்தி காவலாளியை நியமித்து முழுவதுமாக பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உடற்பயிற்சி மையம் அருகே மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ இவ்வாறு கூறினார்.

Tags :
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100