×

அய்யனார் கோயில் குதிரை சிலைக்கு ஜிகினா மாலைக்கு தடை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுமா?

ஆலங்குடி, ஜன. 23: புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட  அய்யனார் கோயிலில் உள்ள குதிரை சிலைக்கு ஆண்டுதோறும் அணிவிக்கப்பட்டு  வந்த ஜிகினா மாலைக்கு இந்தாண்டு  முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து சமய  அறநிலையத்துறை கண்காணிப்பில் குளமங்கலத்தில் உள்ள பெருங்காரையடி மீண்ட  அய்யனார் கோயிலில் 33 அடி உயரத்தில் குதிரை சிலை உள்ளது. ஆசிய அளவில்  புகழ்பெற்ற இந்த குதிரை சிலைக்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் மகரம்  நட்சத்திரத்தையொட்டி 2 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்நிலையில் அடுத்த மாதம் 19ம் தேதி திருவிழா நடைபெறவுள்ளது. இத்திருவிழாவின்போது குதிரை  சிலைக்கு 1,200க்கும் மேற்பட்ட ஜிகினா மாலைகள் அணிவிக்கப்படும்.  இந்தாண்டு   முதல் ஒருமுறையே பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்  பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதால் குதிரை சிலைக்கு ஜிகினா மாலை  அணிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து குளமங்கலம் கிராமத்தினர் கூறியதாவது: பழமையான  வரலாற்று சிறப்பு பெற்ற இக்கோயிலுக்கு சில ஆண்டுகளுக்கு முன் வரை காகித  மாலை அணிவிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு ஜிகினா மாலை அணிவிக்கப்பட்டு  வந்தது. திருவிழா முடிந்ததும் மாலைகளை அகற்றி அங்குள்ள வில்லுனி ஆற்றில்  போடப்படும். கடந்த 2 ஆண்டுகளில் அகற்றப்பட்ட மாலைகள் ஆற்றில் மக் காமலே  உள்ளன. ஜிகினா மாலைகள் பிளாஸ்டிக் மாலையாக கருதப்படுவதால் இந்த மாலைக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் சிலர் அணிவிக்கலாம்  எனவும் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்க வேண்டும் என்றனர்.

Tags : Ayyanar ,announcement ,
× RELATED ஆயக்காரன்புலம் கலீதீர்த்த ஐயனார் ஆலய தங்க குதிரை திருவிழா