×

வருங்காலங்களில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லலாம் பி.டி உஷா பேட்டி

புதுக்கோட்டை, ஜன. 23: அறிவியல் பூர்வமாக பயிற்சி  அளித்தால் வரும் காலங்களில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் என்று இந்திய தடகள முன்னாள் வீராங்கனை பிடி உஷா கூறினார். புதுக்கோட்டையில் இந்திய தடகள முன்னாள் வீராங்கனை பி.டி.உஷா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகளில்  நடப்பதல்ல. நீண்ட கால பயிற்சி என்பது முக்கியமானதாகும். எனவே இளம்  வயதிலேயே பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். 14 வயதிலேயே வெற்றியை எதிர்பார்க்க  முடியாது. எனவே பயிற்சி, திறமை, மற்றும் அறிவியல் பூர்வமாக பயிற்சி  அளித்தால் நாம் வரும் காலங்களில் ஒலிம்பிக்கில் வெல்ல முடியும்.
 
நான்  இருந்த காலத்தில் மாஸ்கோவில் தான் சிந்தடிக் டிராக்கை பார்த்தேன். ஆனால்  தற்போது இந்தியாவில் எல்லா மாநிலத்திலும், எல்லா மாவட்டத்திலும் சிந்தடிக்  டிராக் உள்ளது. அதேபோல் இந்தியாவில் தொழில்நுட்பங்களும் உயர்ந்துள்ளது.  மேலும் அரசும் தனியார் நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் திறமையான  கிராமப்புற இளைஞர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க முக்கியத்துவம் கொடுக்க  வேண்டும்.
எல்லா மாநிலங்களிலும் ஒரு விளையாட்டு மையத்தை துவங்கி அதில் 13,  14 வயதுடைய திறமையான மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு படிப்புடன்  விளையாட்டு பயிற்சி அளிக்க வேண்டும். அதில் இருந்து திறமையானவர்களை தேர்வு  செய்து பயிற்சி அளிக்க வேண்டும். எனது காலகட்டத்தில் பெண்கள் விளையாட்டு  துறையில் அதிகம் இருந்தனர். ஆனால் தற்போது ஆண்கள் ஆர்வமாக வருகின்றனர்.  ஆனால் ஆண்கள் முன்னுக்கு வரும்போது அவர்கள் கவனம் சிதறுகிறது. இவ்வாறு  அவர் கூறினார்.

Tags : Pudu Usha ,Olympics ,
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...