×

பட்டுக்கோட்டை பழனியப்பன் தெருவில் சாய்ந்து நின்ற மின்கம்பம் அகற்றம்

பட்டுக்கோட்டை, ஜன. 23: தினகரன் செய்தி எதிரொலியால் பட்டுக்கோட்டை பழனியப்பன் தெருவில் சாய்ந்து நின்ற மின்கம்பம் உடனடியாக அகற்றப்பட்டது.
பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் நகரம் முழுவதும் பிரதான முக்கிய சாலைகளில் 150க்கும் மேற்பட்ட ஓரியண்டல் மின்கம்பம் மூலம் எல்இடி (ஒளி உமிழும் டையோடு) விளக்குகளை கொண்டு தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கஜா புயல் ஏற்படுவதற்கு முன்பிலிருந்தே பல இடங்களில் தெருவிளக்குகள் எரியவில்லையென பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். பட்டுக்கோட்டையின் முக்கிய பிரதான சாலையான நகராட்சி 24வது வார்டு பழனியப்பன்தெரு மெயின்ரோட்டில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. இந்த சாலை வழியாக தான் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் சென்று வருகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த மெயின்ரோட்டில் உள்ள ஒரு ஓரியண்டல் மின்கம்பம் (24 W - OR 12 என்று எழுதப்பட்டிருக்கும்) கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி ஏற்பட்ட கஜா புயலின்போது ஏற்பட்ட தாக்கத்தால் அதிலிருந்த எல்இடி விளக்கும் எரியவில்லை. அதிலிருந்தே அந்த மின்கம்பமும் சாய்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பலமுறை சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறியும் இதுவரை நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் நகராட்சி அதிகாரிகள் தங்களது  மெத்தனப்போக்கை கைவிட்டு உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை செய்தி கடந்த 19ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாய்ந்து நின்ற மின்கம்பத்தை உடனடியாக அங்கிருந்து அகற்றினர்.
இதுகுறித்து இப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் கூறுகையில், சேதமடைந்த மின்கம்பம் அகற்றுவதற்கு காரணமான தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் நகரம் முழுவதும் பிரதான சாலைகளில் பல இடங்களில் எல்இடி விளக்குகள் எரியாமல் உள்ளது. அதையும் உடனடியாக சரி செய்ய வேண்டும்
என்றனர்.

Tags : street ,Pattukottai Palaniyappan ,
× RELATED பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு