×

இந்தநாள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ வேலைநிறுத்தம் துவங்கியது ஆர்ப்பாட்டத்தில் 2600 பேர் பங்கேற்பு

சிவகங்கை, ஜன. 23: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கினர். 9 தாலுகாக்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 2600 பேர் கலந்து கொண்டனர். அரசு ஊழியர்களுக்கான சலுகைகளும், திட்டங்களும் தற்போது 2 விதங்களாக  மாறிப்போய் கிடக்கிறது. காரணம் புதிய ஓய்வூதியத்திட்டம். அரசு வேலையை 2003  ஏப்ரலுக்கு முன்பு, பின்பு என்று 2 விதமாய் பிரிக்கலாம். அந்தளவிற்கு  இருவேறு துருவங்களாய் ஊதிய உரிமைகள் போக்கு காட்டி வருகின்றன. அரசு  வேலைக்கென்று இருந்த பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த புதிய திட்டத்தினால்  துடைத்தெடுக்கப்பட்டன. பணிக்காலம் முடிந்ததும் ஓய்வூதியம் பெற முடியாத நிலை  உருவாகி உள்ளது. புதிய ஓய்வூதியத்திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட  ஊழியர்களின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கும் இதுவரை எவ்வித பதிலுமில்லை.  மேலும் இப்பணத்தில் கடன் போன்ற அவசர தேவைக்குக்கூட பணம் எடுக்க முடியாது.  பணிக்கொடை ரத்து என்று சலுகை பறிப்புகள் வரிசையாக வந்து கொண்டே இருந்தது.இதற்கு  எதிராக குரல் எழுப்பி... போராடி... மூச்சு முட்டிய நிலையில் இவர்களுக்கு  எதிராக அடுத்த அஸ்திரம் வந்தது ஏழாவது ஊதியக்குழு வடிவில். ஊதியக்குழுவின்  தன்மையையே கேலிக்குரியதாக்கும் வகையில் இதில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.  10 ஆண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசி உயர்விற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும்  இச்சம்பளம் வெறும் இரண்டாயிரம் என்ற போது அரசு ஊழியர்கள் மேலும்  அதிர்ந்தனர். அதுவும் 21 மாதம் இழுத்து... இழுத்து... அந்த  நிலுவைத்தொகையும் தர முடியாது என்று அரசு கைவிரித்த போதுதான் இடிவிழுந்தது  போல உணர்ந்தனர். இதுபோன்ற தொடர் சலுகை பறிப்பின் மூலம் அரசு ஊதிய  விகிதத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இதுதவிர இடைநிலை  ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். முதுநிலை  ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள்,  தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர், களப் பணியாளர்கள், பல்வேறு  துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்களின் ஊதிய  முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும்  சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள்,  கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில்  பணியாற்றும் சிறப்பாசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை  பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும்.  2003 மற்றும் 2004ம் ஆண்டு மற்றும் பல்வேறு காலகட்டங்களில்  தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்  மற்றும் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல்  பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். பணியாளர்கள் பகுப்பாய்வுக்  குழுவினை ரத்து செய்ய வேண்டும். 5 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடுவதை உடனடியாக  கைவிட்டு, சமூக நீதியினை பாதுகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 3  ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன்  இணைக்கும் முடிவினையும், 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்கள் மூடும் முடிவினை  ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டு  வருகின்றன. இது ஒருபுறம் இருக்க... சங்க போராட்ட வரலாறுகளில்  போராட்டமும் சலுகை மீட்பும் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் ‘எவ்வளவு  போராடினாலும்’ கண்டுகொள்ளாத தமிழக அரசின் நிலை இவர்களுக்குள் பெரும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து காத்திருப்பு,  உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், முற்றுகை, மறியல் என்ற போராட்டங்களின் பல்வேறு  நிலைகளைக் கடந்து ஒருகட்டத்தில் தொடர்வேலைநிறுத்தம் என்ற நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். இதன்படி நேற்று முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  (ஜாக்டோ- ஜியோ) இணைந்து தமிழகம் முழுவதும் வலுவான போராட்டத்தை துவக்கி  உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தளவில் சிவகங்கை காரைக்குடி, திருப்புத்தூர், திருப்புவனம், காளையார்கோவில், தேவகோட்டை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகங்கை: சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பஞ்சுராஜ், மைக்கேல்ராஜ், குமார், ராம்குமார், இளமுருகு தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துச்சாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காரைக்குடி: காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு  ஜெய்சங்கர், பாலகிருஷ்ணன், பழனியப்பன் தலைமை வகித்தனர். இளமாறன், சரவணன் முன்னிலை வகித்தனர். உயர்மட்ட குழு உறுப்பினர் சங்கர் சிறப்புரையாற்றினார். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் காரைக்குடி தாலுகாவில் மட்டும் 70 சதவீத பள்ளிகள் மூடப்பட்டு கிடந்தன.
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். முத்துமாரியப்பன், மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தனர். முத்துப்பாண்டி வரவேற்றார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர் சிங்கராய், பழனியப்பன், கருப்பையா, ஜெகன், மகாலிங்கஜெயகாந்தன் கண்டன உரையாற்றினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருப்புவனம்: திருப்புவனம் யூனியன் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெரோம் ஆரோக்கியதாஸ், கதிரேசன், சக்திவேல்,  செல்வக்குமார், இளங்கோ, சத்தியேந்திரன் பேசினர். இதில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேவகோட்டை: தேவகோட்டை யூனியன் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அழகப்பன், அதிசயராஜ் தலைமை வகித்தனர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் நாகேந்திரன், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக்கல்லூரி ஏகோஜிராவ் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளையான்குடி: இளையான்குடி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். காளையார்கோவில்: காளையார்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் 385 பேர் கலந்து கொண்டனர். இதேபோல் மானாமதுரை தாலுகாவில் 250 பேரும், சிங்கம்புணரி தாலுகாவில் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இன்று அனைத்து தாலுகாக்களிலும் சாலை மறியல் போராட்டம் நடக்க உள்ளது.

வேலைநிறுத்தத்தில்
10 ஆயிரம் பேர் பங்கேற்பு
மாவட்டத்தில் சத்துணவு, வருவாய், ஊரகவளர்ச்சி, நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட  10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட அனைத்து நிலை அலுவலர்களும் போராட்டத்தில் பங்கேற்று வருவதால் நூறுநாள் வேலை திட்டம், வரி வசூல், வீடுகட்டும் திட்டம் உள்ளிட்ட பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து யூனியன் அலுவலகம், தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் சில துறை அலுவலகங்கள் ஊழியர் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. சத்துணவு அமைப்பாளர், சமையலர், அங்கன்வாடி ஊழியர் உள்ளிட்டோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் சத்துணவுப்பணிகள் முழுமையாக முடங்கியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை ஏராளமான ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் 97 சதவீதமும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் 56 சதவீதமும் ஆசிரியர்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டன.

Tags : demonstration ,participants ,
× RELATED ருச்செந்தூரில் விசிக ஆர்ப்பாட்டம்