கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் சிறிய குட்டையில் இரைதேடும் கொக்குகள்

வேதாரண்யம், ஜன.23:  கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில், கஜா புயலுக்கு பிறகு போதிய உணவின்றி பறவைகள் அலைகின்றன.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ஆண்டுதோறும் ஆர்ட்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும், உணவுக்காகவும் அங்குள்ள லட்சக்கணக்கான பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனி சிறப்பு. மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, கரண்டிமூக்கு நாரை, சிவப்புகால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, பர்மா சிறவி வகைகள், இலங்கை கடல்காகம், ஆர்டிக் பிரதேசம் ஆர்டிக்டேன் (ஆலா), இமாச்சல பிரதேசம் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகை பறவைகள் என இந்தாண்டு 25 வகை பறவைகள் வந்து சென்றன.

கடந்த மாதம் வீசிய கஜா புயலால் நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்துவிட்டன. கஜா புயலுக்கு பிறகு வெளிநாட்டு பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வருவது வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் தற்போது இருக்கும் பறவைகளுக்கு போதுமான உணவின்றி தவித்து வருகிறது. இதனால் பெரும்பலான வெளிநாட்டு பறவைகள் தங்களின் சொந்த நாடுகளுக்கு முன்கூட்டியே செல்ல துவங்கி விட்டன. சரணாலத்தில் தற்போது இருக்கும் பறவைகள் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரில் இரை தேடி அலைகின்றன. கஜா புயல் பாதிப்பால் சுற்றுலா பயணிகள் வருவது குறைந்துள்ளது.

வழக்கமாக கோடியக்கரை பறவைகள் மற்றும் வனவிலங்கு சரணாலயத்திற்கு பொங்கல் விடுமுறைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் வந்துசென்றனர்.

கஜா புயல்பாதிப்பால் களையிழந்து காணப்படும் கோடியக்காடு வனவலங்கு சரணாலயம் மீண்டும் புத்துயிர் பெற இன்னும் ஒருசில ஆண்டுகள் ஆகும் என இயற்கை ஆர்வாலர்கள் கூறுகின்றனர்.

Related Stories: