×

குஜிலியம்பாறை அருகே ஏடிஎம் திடீர் மூடல் வாடிக்கையாளர்கள் திண்டாட்டம்

குஜிலியம்பாறை, ஜன. 23: குஜிலியம்பாறை அருகே ஏடிஎம் மையம் திடீரென மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பணம் விரைவாக எடுக்க வசதியின்றி திண்டாடி வருகின்றனர். குஜிலயம்பாறை அருகே சூலப்புரத்தில் பேங்க் ஆப் இந்தியா- மல்லப்புரம் கிளை செயல்பட்டு வருகிறது. இதன் ஏடிஎம் மையம் அருகிலேயே தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மல்லப்புரம், சூலப்புரம், கூம்பூர், ஆர்.வெள்ளோடு, திருக்கூர்ணம் உள்ளிட்ட கிராமத்தினர் இந்த வங்கியில்தான் சேமிப்பு கணக்கு, 100 நாள் வேலை சம்பள கணக்கு வைத்துள்ளனர். மேலும் இங்குள்ள ஏடிஎம்மிலும் பணம் எடுத்து வருகின்றனர். குறிப்பாக வங்கியில் கூட்டமிருக்கும் பணம் எடுக்க ஏடிஎம்மே வசதியாக இருந்தது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் எந்த ஒரு முன்னறிவிப்பின்றியும் திடீரென இந்த ஏடிஎம் மையத்தை மூடிவிட்டனர். இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதுகுறித்து தாதாநாயக்கனூரை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘5 கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ளனர். வாடிக்கையாளர்கள் நீண்டநேரம் காத்திருந்து பணம் எடுப்பதை தவிர்க்கும் பொருட்டு இந்த ஏடிஎம் மையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. தற்போது திடீரென ஏடிஎம் மையத்தை மூடிவிட்டனர். இதனால் பணம் எடுப்பதற்கு மீண்டும் வங்கியில் மணிக்கணக்காக காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே வங்கி உயரதிகாரிகள், வாடிக்கையாளர்கள் நலன் கருதி ஏடிஎம் மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : ATM ,closure ,clients ,Gujiliyambalam ,
× RELATED வைபை, பாஸ்வேர்டு இல்லாத ஏடிஎம்...