×

விவசாயம் செழிக்க நிலா பெண் திருவிழா

வேடசந்தூர், ஜன. 23: வேடசந்தூர் அருகே விவசாயம் செழிக்க வேண்டி சிறுமியை நிலா பெண்ணாக பாவிக்கும் திருவிழா நடைபெற்றது. வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டியில் உலக அமைதிக்காகவும், ஊர் செழிக்கவும் ஆண்டுதோறும் நிலா பெண் வினோத திருவிழா நடத்தப்படுகிறது வழக்கம். அதாவது சிறுமிகளை பொதுஇடத்தில் இரவு முழுவதும் அமர வைத்து இதில் விடியும் வரை யார் தூங்காமல் இருக்கிறாரோ அவர்தான் நிலா பெண்ணாக தேர்வு செய்யப்படுவார். மற்ற சிறுமிகள் அனைவரும் நிலா பெண்ணுக்கு பாலை படைப்பார்கள். பின்னர் ஊர் பெரியவர்கள் எல்லையில் உள்ள சரளிமலைக்கு நிலா பெண்ணை அழைத்து செல்வர். அங்கு ஆவாரம் பூக்கள் நிரப்பிய கூடையை நிலா பெண்ணும் தலையில் வைத்தபடி ஊர்வலமாக ஊருக்குள் அழைத்து வருவர். அங்கு நிலா பெண்ணுக்கு மேளதாளம் முழங்க  ஊர்மக்கள் வரவேற்பு அளிப்பர். பின்னர் மாசடச்சியம்மன் கோயிலுக்கு நிலா பெண் அழைத்து செல்லப்பட்டு அவரது முறை மாமன்கள் தென்னை ஓலையால் குடிசை அமைத்து அமர வைப்பார். தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து கோயில் முன்பு நிலா பெண்ணை உட்கார வைத்து கும்மியடித்து சடங்கு செய்வர். பின்னர் அதிகாலையில் நிலா மறைய துவங்கியதும் ஊர்மக்கள் நிலா பெண்ணை அழைத்து கொண்டு அங்குள்ள கிணற்றுக்கு அழைத்து சென்று ஆவாரம் பூக்கூடையை கிணற்றில் வீசுவர். அந்த பூ பந்துபோல் மிதக்கும். அதில் நிலா பெண் விளக்கேற்றியதும் அனைவரும் ஊர் திரும்புவர். கிணற்றில் ஏற்றப்பட்ட விளக்கு தொடர்ந்து 7 நாட்கள் எரிந்து கொண்டு இருக்கும் என்பது ஐதீகம். அதன்படி இந்தாண்டு நிலா பெண்ணாக ரமேஷ் நவமணி என்பவரது மகள் கனிஷ்கா (7) தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு, ஊர்மக்கள் மேற்கண்ட சடங்குகளை செய்து கிணற்றில் ஆவாரம் பூக்கூடையை போட்டு விளக்கேற்ற வைத்தனர். அப்பகுதியினர் கூறுகையில், ‘‘இவ்விழாவை 100 ஆண்டுகளுக்கு மேல் எங்கள் ஊரில் நடத்தி வருகிறோம். இவ்விழா மூலம் உலகம் அமைதியடையும், ஊர் செழிக்கும் என்பது எங்கள் ஐதீகம். ஒருமுறை தேர்வு செய்யப்படும் நிலா பெண் 3 ஆண்டுகள் இருப்பார்’’ என்றனர்.

Tags : Moon ,girl festival ,farm ,
× RELATED கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு விழா அறக்கட்டளையினர் ஆலோசனை