×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு இன்று நிறைவு

சத்தியமங்கலம், ஜன.23: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வனவிலங்குகள் கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பு பணி இன்றுடன் முடிவடைகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான், காட்டெருமை, காட்டுப்பன்றி  உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதியில் 6 மாதங்களுக்கு ஒரு முறை மழைக்காலத்திற்கு முன் மழைக்காலத்திற்குப்பின் என 2 முறை வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடப்பது வழக்கம்.  அதன்படி, மழைக்காலத்திற்கு பிந்தைய கணக்கெடுப்பு பணி கடந்த 18ம் தேதி துவங்கியது. 6 நாட்களுக்கு  நடந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி, சத்தியமங்கலம்  புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, ஆசனூர், கேர்மாளம் மற்றும் தாளவாடி ஆகிய 7 வனச்சரகங்களில் 230க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் 5 பேர் 46 குழுக்களாக பிரிந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவினரும் தனித்தனியாக வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகளின்  கால்தடம் மற்றும் எச்சத்தை அளவீடு செய்தும், எச்சத்தை சுற்றி ஒரு மீட்டர் சுற்றளவிற்கு புற்கள் உள்ளனவா எனவும்,  எச்சத்தை வெயில்படும் இடங்கள், நிழல்பகுதி, நீர்நிலை உள்ள பகுதி மற்றும் மேட்டுப்பாங்கான பகுதிகளில் இடுகின்றனவா எனவும் எச்சங்கள் மறைய ஆகும் கால அளவு குறித்தும்,  ஜிபிஎஸ் கருவி, வியூபைண்டர், காம்பஸ் உதவியுடன் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இதில் 3 நாட்களுக்கு பகுதி வாரி கணக்கெடுப்பும், 3 நாட்களுக்கு நேர்கோட்டுப்பாதை கணக்கெடுப்பும் நடக்கிறது. ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இன்று கணக்கெடுப்பு பணி முடிந்த உடன் வனவிலங்குகள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவருக்கு அனுப்பி வைக்கப்படும் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநர்கள் அருண்லால், குமுளி வெங்கட அல்லப்ப நாயுடு ஆகியோர் தெரிவித்தனர்.

Tags : Sathamangalam ,Tiger reserve forest census ,
× RELATED தொடர் மழை காரணமாக சத்தியமங்கலம் பகுதியில் செங்கற்கள் உற்பத்தி பாதிப்பு