×

நீர்நிலை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதை கண்டித்து மக்கள் திடீர் சாலை மறியல்

பள்ளிப்பட்டு,ஜன.23: பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டையில் நீர்நிலை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு பொம்மராஜபேட்டையில் மாற்று இடம்  வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு சாலையில் அமைந்துள்ள சுந்தரம்மாள் கண்டிகை காலனி, குளக்கரைப்  பகுதியில்  20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்  பல ஆண்டுகளாக  வசித்து வருகின்றனர். நீர் நிலைப் பகுதிகள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள வீடுகள் அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த வாரம் திருத்தணி கோட்டாட்சியர்  பவணந்தி தலைமையில் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்த பிறகுதான், வீடுகள் அப்புறப்படுத்த வேண்டும் என்று  அப்பகுதி மக்களின் கோரிக்கை வைத்தனர். இதை   ஏற்று  வீடுகள் அப்புறப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் உடனடியாக  மாற்று இடம்  ஒதுக்கீடு செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க பொம்மராஜிபேட்டை  அருகே புறம்போக்கு இடத்தை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்புத்  தெரிவித்து பொம்மராஜிபேட்டை சேர்ந்த 100க்கும்  மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும்  போராட்டம் கைவிடாத நிலையில் வட்டாட்சியர் லட்சுமணன் (பொறுப்பு)  சம்பவ  இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முறையில் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று  உறுதி கூறினார். இதை ஏற்று மறியல் போராட்டம்  கைவிடப்பட்டது.

Tags : homeowners ,houses ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா...