×

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்குவதில் மெத்தனம் தர்மபுரியில் 8 அரசு பஸ்கள் ஜப்தி

தர்மபுரி, ஜன.22: விபத்து வழக்குகளில் உரிய இழப்பீடு வழங்காததால், தர்மபுரி பஸ் நிலையத்தில் நேற்று 8 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.  தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நல்லாம்பட்டியை சேர்ந்தவர் கன்னியப்பன் (55). கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி காலை 6 மணிக்கு, சர்க்கரை ஆலை பகுதியில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கன்னியப்பன் பலியானார். அவரது உறவினர்கள் தரப்பில் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க கேட்டு, தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

2017 செப்.20ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி, கன்னியப்பன் குடும்பத்தினருக்கு ₹8 லட்சத்து 73 ஆயிரத்து 500யை போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், அரசு போக்குவரத்து கழகத்தினர் இழப்பீடு வழங்காததால் கன்னியப்பன் குடும்பத்தினர், 2018 செப்.20ல் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இதில், வட்டியுடன் ₹11 லட்சத்து 3,688 வழங்க வேண்டும். இல்லையெனில் 2 அரசு பஸ்களை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார்.  

இதேபோல், 2014 ஏப்.28ம் தேதி சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை சேர்ந்த மாது என்பவரின் மனைவி பூங்கொடி (55) என்பவர் மீது அரசு பஸ் மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கு இழப்பீடு வழங்க கோரி, பூங்கொடியின் குடும்பத்தினர், தர்மபுரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், ₹9 லட்சத்து 36 ஆயிரத்து 960 வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

பாலக்கோடு அடுத்த அண்ணாமலைஅள்ளியில் கடந்த 2016 ஏப்.13ம் தேதி டவுன் பஸ்சில் இருந்து இறங்க முயன்றபோது, அதே பகுதியை சேர்ந்த மாதம்மாள் (60) என்பவர் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார். மாதம்மாள் குடும்பத்தினருக்கு ₹4 லட்சத்து, 17 ஆயிரத்து, 849 இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு தர்மபுரி நீதிபதி உத்தரவிட்டார். விபத்து தொடர்பான அனைத்து வழக்குகளிலும், அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால் மொத்தமாக 10 பஸ்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டதில் நேற்று ஒரே நாளில் 8 அரசு பஸ்களை ஜப்தி செய்து நீதிமன்ற ஊழியர்கள் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் தர்மபுரி பஸ் நிலையத்தில் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது