×

தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் கொண்டாட்டம்

கம்பம், ஜன. 22: தைப்பூசத்தை முன்னிட்டு கம்பம் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள முருகன் கோயில்களில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கம்பம் அருகே சண்முகநதி அணைப்பகுதி அருகே பசுமலைச்சாரலில் உள்ள சண்முகநாதன் பாலதண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை 6 மணி முதல் பால், பஞ்சாமிருதம், நெய் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் மூலவர் பாலதண்டாயுதபாணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவில், கம்பம், காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, நாராயணத் தேவன்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆண், பெண் முருக பக்தர்கள் பாதயாத்திரையாக பால்குடம் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.

தேனி எம்பி பார்த்திபன், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் ஆகியோர் தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சண்முகநாதன் கோயில் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் நடைபெற்றது. விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு காமய கவுண்டன்பட்டியில் இருந்து சிறப்பு தனியார் வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை அணைப்பட்டி பழனி பாதயாத்திரைக்குழு, திருச்செந்தூர் சைக்கிள் யாத்திரைக்குழு மற்றும் கமிட்டியினர் செய்திருந்தனர்.

கூடலூர் நகராட்சியின் 21 வது வார்டு பகுதியான லோயர்கேம்பை அடுத்து, குமுளி மலைச்சாலையில் உள்ள வழிவிடும் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் உட்பட பல சுற்றுக்கிராமங்களில் இருந்து, மாலை அணிந்து விரதமிருந்த நூற்றுக்கணக்கான ஆண் பெண் முருக பக்தர்கள் பாதயாத்திரையாக பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் சார்பில் கம்பத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. லோயர் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதுபோல் சுருளி அருவியிலுள்ள சுருளியாண்டவர் கோயில்,  கூடலூரில் உள்ள கூடல் சுந்தரவேலவர், கம்பம் சுருளிவேலப்பர் கோயில், கம்பம் கம்பராய பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
பெரியகுளத்தில் வரகாநதியின் தென்கரையில் உள்ள  பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழா நடைபெற்றது.  இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 11ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழீஸ்வரரால் கட்டப்பட்டது.  இந்த கோயில் காசிக்கு அடுத்தபடியாக வராகநதிக்ரையின் இரு புறங்களிலும் ஆண், பெண் மருதமரங்கள் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். இக்கோயிலில் நேற்று தைப்பூசத்தையொட்டி முருகன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இவ்விழாவைக் காண ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags : festival celebration ,temples ,Murukan ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு