×

என். வயிரவன்பட்டியில் 2 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் புதிய சேவை மையக் கட்டடம்

திருப்புத்தூர், ஜன. 22: கல்லல் ஒன்றியம் என்.வயிரவன்பட்டி ஊராட்சியில்  2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அப்பகுதியினிர் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லல் ஒன்றியம் என். வயிரவன்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 2014-15ம் நிதியாண்டில் கிராம சேவை மையக்கட்டடம் ரூ.14.43 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. இந்த சேவை மையத்தின் மூலம் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, முதல் பட்டதாரிச்சான்று மற்றும் பட்டா, சிட்டா நகல் உள்ளிட்டவைகள் பெறலாம்.

ஆனால் இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இப்பகுதியினர் சான்றிதழ்கள் பெற அருகில் உள்ள சேவை மையம் அல்லது தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அலைச்சலின்றி, பொருளாதாரச்செலவின்றி உள்ளுரிலே பெறவேண்டிய சான்றிதழ்களை செலவு செய்து பஸ் ஏறி ஒரு நாள் வேலையை இழந்து தாலுகா அலுவலகம் வந்து செல்லவேண்டிய நிலைமை உள்ளது என பொதுமக்கள் கவலைப்படுகின்றனர். எனவே இந்த இ சேவை மையக் கட்டடத்தை விரைவில் திறக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : service center building ,Vyaravanpatti ,
× RELATED பணிகள் முழுமை பெறாததால் சேவை மையக் கட்டிடம் கழிவறையாக மாறிய அவலம்