×

பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பது எப்படி?

கோவை, ஜன.22: கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்று கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது. இது குறித்து கோவை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பறவைக்காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான் கோழி மற்றும் வனப்பறவைகளை தாக்கும். மனிதரையும் தாக்கக்கூடியது. நோய் தாக்கிய வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் வனப்பறவைகள் மூலம் இந்நோய் நமது நாட்டில் நுழைய வாய்ப்புள்ளது. பறவைக்காய்ச்சல் நோய் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்து கொள்ள வேண்டும்,  வாத்து, வான்கோழி, கோழிகள் முதலிய பல்வேறு இனப்பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்க கூடாது. வெளியாட்கள், வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழையக்கூடாது. இதர பண்ணை உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. பண்ணை உபகரணங்கள் மாதம் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கோழிப்பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பறவைக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் : தலை மற்றும் கொண்டை வீக்கம், கொண்டையில் நீல நிறம் பரவுதல், சோர்வு அதிக அளவில் இறப்பு, இறந்த கோழிகள் தசைகளில் ரத்தக்கசிவு, மூச்சுக்குழலில் அதிக சளி அனைத்து உள் உறுப்புகள் மற்றும் கால்களின் மீது இரத்தக்கசிவு.நோய் பாதித்த பண்ணைகளில் நோயற்ற மற்றும் இறந்த கோழிகளை கையாளுவோருக்கு இந்நோய் சுவாசக்காற்று மூலம் பரவக்கூடும். காய்ச்சல், தொண்டைப்புண், இருமல் ஆகியவை மனிதரில் இந்நோயின் அறிகுறிகள். நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகள் உண்பதால் இந்நோய் பரவாது. பறவைக்காய்ச்சல் ேநாய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை. சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும்.இவ்வாறு கோவை கால்நடை பராமரிப்புதறை மண்டல இணை இயக்கநர் தெரிவித்துள்ளார்.

Tags : farms ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...