×

பாலாற்றில் தடுப்பணை கட்டாமல் இலவச பரிசுப்பொருட்களா? பொங்கல் பரிசை திருப்பி அளித்த சமூக ஆர்வலர்

காஞ்சிபுரம், ஜன.22: பல ஆண்டுகளாக விவசாயிகள் பாலாற்றில் தடுப்பணை கட்ட கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  நிதியில்லை எண்ற காரணம் காட்டி, அதனை செயல்படுத்தாமல் தமிழக அரசு தள்ளிப்போட்டு வருகிறது. ஆனால் பொங்கல் பரிசாக ரூ, 2548 கோடியை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொங்கல் பரிசை மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தியிடம் தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழக அமைப்பாளர் கோ.ரா.ரவி திருப்பி அளித்தார். பொங்கல் பரிசுப்பொருள்களை திருப்பி அளித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பாலாற்றில் தடுப்பணை கட்டக் கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. ஆனால் பொங்கலுக்கு 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 2548 கோடி ரூபாயை பொங்கல் பரிசாக இலவசமாக வழங்கி இருக்கிறது.

பொங்கல் பரிசு வழங்க செலவிடப்பட்ட தொகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கி இருக்கலாம். காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாலாற்றில் தடுப்பணை கட்ட பயன்படுத்தி இருக்கலாம். தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் அரசு தலைமை மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் உள்ளனர். அந்த காலிப் பணியிடங்களை நிரப்பி இருக்கலாம்.  பொங்கல் பரிசாக செலவிடப்பட்ட தொகையின் மூலம் புதிதாக சுமார் 1500 புதிய பேருந்துகள் வாங்கியிருக்கலாம். காஞ்சிபுரத்தில் மழைநீர் கால்வாய் அமைப்பை இதன்மூலம் சரிசெய்து இருக்கலாம்.

இவற்றையெல்லாம் செய்யாமல் இலவசமாக பொங்கல் பரிசு வழங்குவதால் எந்தப் பயனும் இல்லை. இவற்றையெல்லாம் செய்ய மனம் இல்லாத தமிழக அரசின் பொங்கல் பரிசை வாங்க எனக்கு விருப்பம் இல்லை. எனவே தமிழக அரசு எனது குடும்ப அட்டைக்கு அளித்த சர்க்கரை, பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், இரண்டு அடி கரும்பு, ரூ. 1000 ஆகியவற்றை திருப்பி அளிக்கிறேன். இனி வரும் காலங்களிலாவது இலவசங்களை கொடுக்காமல் ஆக்கபூர்வமான நல்ல செயல்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED இறக்கை கட்டி பறக்கிறது இந்தியா...