×

பள்ளிகளை ஆய்வு செய்ய கவர்னர் உத்தரவு

புதுச்சேரி, ஜன. 22: புதுவை கல்வித்துறை அலுவலகத்தில் திடீரென ஆய்வு செய்த கவர்னர் கிரண்பேடி, அரசு பள்ளிகளை தினமும் ஆய்வு செய்யுமாறு துணை ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டார்.புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி வாரந்தோறும் வேலை நாட்களில் அரசு துறைகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு சட்டவிதிகள் தொடர்பாக தேர்வு நடத்தி வருகிறார். இது அதிகாரிகள் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை கல்வித்துறை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்வித்துறை கட்டிடத்தின் கீழ்தளம் மற்றும் முதல் மாடியில் உள்ள ஒவ்வொரு பிரிவுகளையும் பார்வையிட்ட கவர்னர், பணி குறித்த விபரங்களை அங்கிருந்த இயக்குனர் ருத்ரகவுடு, இணை இயக்குனர் குப்புசாமி உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.அப்போது புதுவையில் கல்வித்துறைக்கு தேவையான விவரங்கள் மற்றும் வரும் மனுக்களை கணினி மூலம் பாதுகாக்க அறிவுறுத்தினார். மேலும், கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ரகசிய ஆவணங்களை கணினியில் பதிவு செய்து பாதுகாக்க வேண்டும். கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பட்டியலிட கவர்னர் உத்தரவிட்டார். கல்வித்துறையில் சுமார் 2 மணி நேரம் ஆய்வு செய்த பின்னர் அங்கிருந்து ராஜ்நிவாசு கவர்னர் புறப்பட்டு சென்றார்.இந்த ஆய்வு குறித்து கவர்னர் கிரண்பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கல்வித்துறையின் தகவல் மையத்துக்கு வரும் அனைத்து அழைப்புகள் விவரத்தை கணினி மூலம் பதிவு செய்ய வேண்டும். முக்கிய கோரிக்கைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும். கல்வித்துறைக்கு செல்லும் கோப்புகள், கடிதங்கள் எங்கு உள்ளது என்பதை ஆன்லைனில் காணும் வசதியை உருவாக்க வேண்டும். துணை ஆய்வாளர்கள் தினந்தோறும் அரசு பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். அதன் விவரங்களை மூத்த அதிகாரிகளுக்கும், கல்வித்துறை செயலர், கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கும் கணினி மூலம் அனுப்ப வேண்டும்.ஆசிரியர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி  அளிப்பது அவசியம். கணினி மயமாக்கும் திட்டத்தை நிக் மூலம் செயல்படுத்த வேண்டும். மாணவர் சிறப்பு பேருந்துகளை வயர்லெஸ் வழியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்க வேண்டும்.
கல்வித்துறைக்கு வருவோர் காத்திருக்கும் அறையில் அரசு பள்ளி விவரங்கள், சாதனை படைத்த குழந்தைகளின் பட்டியல்,  விளையாட்டு சாதனைகள் ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த உத்தரவுகள் பின்பற்றப்பட்டுள்ளதா? என்று அறிய பிப்.22ம் தேதி மீண்டும் ஆய்வு செய்வேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






Tags : Governor ,schools ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...