×

தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பை கடலூர் பெண்ணையாற்றின் அவலம்

கடலூர், ஜன. 22: கடலூர் பெண்ணை ஆற்றில் திருவிழாவுக்கு பின் தூய்மைப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவு பெருமளவு தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கடலூர் பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் ஆற்று திருவிழா நடைபெறுவது வழக்கம்.  பாரம்பரிய திருவிழா பண்டிகைக்கு பிறகு ஆற்றில் தூய்மைப்படுத்தும்பணி சம்பந்தப்பட்ட நகராட்சி உள்ளிட்ட துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படாமல் போவதால் ஆற்றின் தண்ணீர் மாசுபடுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் பெருகி வருகிறது.இந்த ஆண்டும் வழக்கம் போல் திருவிழா நடந்தது. பல்வேறு ஊர்களிலிருந்து சுவாமிகள் தீர்த்தவாரிக்கு கொண்டு வரப்பட்டது.மேலும் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பல்வேறு வகையான கடைகளும் இடம் பெற்றிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடி  கண்டுகளித்தனர். நகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.இந்நிலையில் திருவிழா முடிந்த நிலையில் ஆற்றின் தன்மை சுகாதாரமற்ற நிலையில் மாசு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பிளாஸ்டிக் குப்பைகள் தேக்கம் இடம்பெற்றுள்ளது.விழாவின் போது பிளாஸ்டிக் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு இடம் பெற்றிருந்ததே அதற்கு காரணமாக அமைந்துள்ளது.
 பிளாஸ்டிக் தடையை கண்காணிக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் போனது இதன் மூலம் அம்பலமாகி உள்ளது.இந்நிலையில் திருவிழா முடிந்த நிலையில் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டிய நகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் ஆற்றின் கரையோரப் பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் தேங்கி கிடக்கிறது.
 இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு