×

மின்விளக்கு இன்றி இருளில் மூழ்கும் அவலம் எண்ணூர் விரைவு சாலையில் ராட்சத பள்ளத்தால் விபத்து கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருவொற்றியூர்: எண்ணூர் விரைவு சாலையில் உள்ள ராட்சத பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அவலம் தொடர்கிறது. இதை சீரமைக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை துறைமுகம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை அமைந்துள்ள சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. சுமார் 17  கிலோ மீட்டர் தூரம் ெகாண்ட இந்த சாலையில் ₹650 கோடி செலவில் விரிவாக்கப் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது.

அதன்படி, எண்ணூர் விரைவு சாலை, மணலி சாலை மற்றும் பொன்னேரி நெடுஞ்சாலை ஆகிய சாலைகளை இணைத்து 4 வழிப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இப்பணிக்காக எண்ணூர் விரைவு சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சென்டர் மீடியன் மற்றும் தார்சாலை  அமைக்கப்பட்டது. இவ்வாறு பல கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சாலையை நெடுஞ்சாலைத் துறை முறையாக பராமரிக்காததால் பல இடங்களில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலை பள்ளங்களில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

குறிப்பாக திருச்சினாங்குப்பம் அருகே எண்ணூர் விரைவு சாலையில் சுமார் 4 அடி அகலத்திற்கு சாலை சிதிலமடைந்துள்ளதால், இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் இங்கு பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பலமுறை நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை துறைமுகம் - எண்ணூர் துறைமுக இணைப்பு சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் சென்று வருகின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை சிதிலமடைந்து பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளிடம் சாலை வரி வசூல் செய்யும் நிறுவனங்கள் இந்த சாலையில் பராமரிப்பு பணியை மேற்கொள்வது இல்லை. இதனால் இந்த சாலையில் சென்ற பலர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். எனவே, பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும் முன், இந்த சாலையை சீரமைத்து, மின் விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பு
சென்னை துறைமுகம் - எண்ணூர் துறைமுகம் நெடுஞ்சாலையில் குறைந்த வேகத்தில் செல்லக்கூடிய வாகனங்களுக்கு சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால் இந்த சர்வீஸ் சாலைகளும் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், துறைமுகத்திற்கு செல்ல வேண்டிய கன்டெய்னர் லாரிகள் இந்த சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. இதற்காக, சாலையின் குறுக்கே தடுப்புகள் வைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

Tags : crash ,Ennore Express Road ,
× RELATED ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விபத்து..!!