×

நெல்லை மாவட்ட கருவூலங்களில் ஆன்லைனில் பண பட்டியல் சமர்பிப்பு

நெல்லை, ஜன. 22: நெல்லை மாவட்ட கருவூலங்களில் ஆன்லைன் மூலம் பண பட்டியல் சமர்ப்பிக்கும் வசதியை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் துவக்கி வைத்தார். நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகளை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது: அரசு பணியாளர்கள் இனி கருவூலங்களுக்கு சென்று தங்களது அலுவலக பட்டியல்களை மணிக்கணக்கில் காத்திருந்து சமர்ப்பிக்க வேண்டாம். கருவூலத்திற்கு நேரிடையாக பிரிண்ட் எடுத்து பட்டியல்களை கொண்டு செல்ல வேண்டியதில்லை. இதனால் கால விரயம் ஏற்படாது. கருவூலங்களுக்கு அனுப்பப்படும் பட்டியல்களை அலுவலகங்களிலிருந்து ஸ்கேன் செய்து அனுப்பினால், கருவூலத்திலிருந்து உடனடியாக கணினி மூலம் சரி பார்க்கப்பட்டு, ஒரே நாளில் சம்பந்தப்பட்ட கணக்குகளில் பட்டியல்களின் தொகை வரவு வைக்கப்படும்.

மேலும், இணையதளம் மூலம் பட்டியல்கள் சமர்ப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காகித பயன்பாடு அலுவலகங்களில் குறைக்கப்படும். விடுபட்ட பதிவுகள் ஏற்படாது. அரசு ஊழியர்களின் வருமான வரி படிவம்-16 போன்றவை தானாக கணக்கிடப்படும். நெல்லை மாவட்டத்திலுள்ள 13 துணை கருவூலங்களிலும் இந்த  ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்ட செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், கருவூலத் துறை மண்டல இணை இயக்குநர் பாத்திமா சாந்தி, மாவட்ட கருவூல அலுவலர் மின்னிபாய், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சிந்தா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Nellai ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!