×

பூச்செடிகள், கன்றுகள் பெற மக்கள் முன்பதிவு செய்யலாம்

சிவகங்கை, ஜன. 18: சிவகங்கை மாவட்டத்தில் ழுச்செடிகள், மரக்கன்றுகள் பெற முன் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை தோட்டக்கலை துணை இயக்குநர் ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் கடந்த 2017-18ம் நிதியாண்டில் மட்டும் சுமார் 9.26 கோடி தரமான தோட்டக்கலை கன்றுகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் தோட்டக்கலை நடவு செடிகள், பழச்செடிகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்ப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல் மற்றும் விளாம்பழம் போன்ற நமது பாரம்பரிய பழக்கன்றுகளும் கருவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மலைவேம்பு, புங்கம், தேக்கு மற்றும் சவுக்கு போன்ற மரங்களும் மல்லிகை, வெட்சி, அரளி போன்ற பூச்செடிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நடவுச்செடிகள் தவிர பல்வேறு பழக்கன்றுகள் மற்றும் இதர தோட்டக்கலை பயிர்களின் நடவுச்செடிகள் விருப்பத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்தும் வழங்கப்படும். இவைகள் மிகக்குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, தங்களது வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட அளவிலான தோட்டக்கலை துணைஇயக்குநர் அலுவலகத்தையோ அணுகி இத்திட்டத்தின் கீழ் பயனடைய முன்பதிவு செய்துகொள்ளலாம்.
உழவன் கைபேசி செயலி, http://tnhorticulture.tn.gov.in/horti/ என்ற இணையத்தள முகவரி, 98940 71746 என்ற வாட்ஸ்அப் எண் ஆகியவற்றிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் தகவல்கள் அறிய 04575 246161, 04575 240009 என்ற சிவகங்கை, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்