×

கட்டண குடிநீர் சரியாக வரவில்லைபொதுமக்கள் ஏமாற்றம்

ராமநாதபுரம், ஜன. 18: மண்டபம் பேரூராட்சியில் கட்டண குடிநீர் சரியாக வராததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விரைவில் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.மண்டபம் பேரூராட்சி மூலம் 18 வார்டுகளுக்கும் கட்டண குடிநீர் வழங்கப்பட்ட வருகிறது. மாதம் ஒன்றுக்கு குடிநீர் கட்டணமாக ரூ.50 வீதம் பொதுமக்கள் காவிரி குடிநீர் வரி பேரூராட்சிக்கு செலுத்தி வர வேண்டும். தற்போது மாதந்தோறும் கட்டணம் முறையாக செலுத்தியும் நாளுக்கு நாள் வீடுகளுக்கு வரும் குடிநீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. தற்சமயம் குடிநீர் மோட்டார் ஓடத்துவங்கிய பிறகு பேரூராட்சிக்கு அருகில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி இருக்கும் இடத்திற்கு அருகில் மட்டும் குடிநீர் சரியாக வருகிறது. தூரம் அதிகமாக உள்ள 1வது வார்டு, 2வது வார்டு பகுதிக்கு குடிநீர் வருவதே கிடையாது. மாதந்தோரும் ரூ.50 கட்டணம் செலுத்தியும் குடிநீர் சரியாக வராததால் கடந்த 4 மாத காலமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகத்தினர் விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்னையை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஏகேஎஸ் தோப்பை சேர்ந்த முருகானந்தம் கூறுகையில், ‘தற்போது பேரூராட்சி காவிரி குடிநீர் மேல்நிலை தொட்டியிலிருந்து தூரம் அதிகம் காரணமாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வருவதே சிரமமாக உள்ளது. ஏற்கனவே கட்டணம் செலுத்தும் குடிநீர் குழாய்களில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வந்தது. தற்போது அதில் குடிநீர் வருவதே கிடையாது. இருப்பினும் மாதந்தோறும் குடிநீருக்கும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் அவர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. பொதுமக்களின் நிலையை பற்றி கவலைப்படாமல் குடிநீர் வரியை மட்டும் பேரூராட்சி நிர்வாகத்தினர் பாக்கி இல்லாமல் வசூல் செய்கின்றனர். விரைவில் கட்டண குடிநீர் வரும் குழாயை மாற்றியோ அல்லது வார்டு வாரியாக பிரித்து குடிநீர் வழங்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த குடிநீர் பிரச்னையை சரிசெய்ய முடியும்’ என்று கூறினார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை