×

திருவள்ளுவர் தினம் குமரியில் அனுமதியின்றி மது விற்ற 19 பேர் கைது 100 மது பாட்டில்கள் பறிமுதல்

நாகர்கோவில், ஜன. 18:  குமரி மாவட்டத்தில் 92 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் ₹6 கோடியே 80 லட்சத்திற்கு மது வகைகள் விற்பனையானது. நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினம் என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள கடைகள் திறக்கப்படவில்ைல. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் கள்ளச்சந்தையில் மதுவகைகள் விற்பனை செய்யாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க எஸ்பி நாத் உத்தரவிட்டு இருந்தார்.  அதன்படி நேற்று முன்தினம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மது விற்றதாக 19 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். கருங்கல் செடலிவிளை பகுதியில் மது விற்றுக்கொண்டு இருந்த வடலிவிளையை சேர்ந்த சசிகுமார்(43) என்பவரை கருங்கல் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இரணியல் அருகே உள்ள நங்கன்விளை பகுதியில் மது விற்ற நுள்ளிவிளையை சேர்ந்த கிருஷ்ணகுமார்(42), நுள்ளி விளையில் மதுவிற்ற  தங்க நாடார் மனைவி பேபி(68) ஆகியோரை இரணியல் போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குளச்சல் இரும்பிலி பகுதியில் மது விற்றுக்கொண்டு இருந்த பண்டாரவிளை பகுதியை சேர்ந்த செல்லதுரை(55) என்பவரை குளச்சல் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல் ஈத்தாமொழி பெரியவிளையில் மது விற்றுக்கொண்டு இருந்த தெற்குவள்ளியாவிளை பகுதியை சேர்ந்த கருப்பசாமி(42) என்பவரை ஈத்தாமொழி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த சோதனையில் மொத்தம் 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 100 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Thiruvalluvar Diwali ,Kumari ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து