×

காணும் பொங்கலை முன்னிட்டு கோவில்பட்டி குருமலை காப்புகாட்டில் குவிந்த மக்கள்

கோவில்பட்டி, ஜன.18: காணும் பொங்கலை முன்னிட்டு கோவில்பட்டி அருகேயுள்ள குருமலை காப்புகாட்டில் மக்கள் குவிந்தனர்.கோவில்பட்டியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குருமலை காப்புகாடுகள். அதிக மூலிகைச்செடிகள் மற்றும் பலவிதமான மான்களை கொண்ட இந்த காட்டுப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் காணும் பொங்கலன்று கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இங்கு குடும்பத்துடன் சென்று விளையாடி மகிழ்வார்கள். இந்தாண்டும் காணும்பொங்கலை யொட்டி நேற்று மக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் கார், ஆட்டோ, டிராக்டர், வேன் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தனர். மலையின் அடிவாரத்தில் உள்ள அய்யனார்கோவில், முருகன் மற்றும் பெருமாள் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மரத்தின் நிழலில் குடும்பத்தடன் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவினை உண்டு மகிழ்ந்தனர். பசுமை இயக்கத்தினை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் நெகிழியை தவிர்க்க வேண்டும் என்று கூறி துணிப்பைகள் வழங்கினர்.
வனத்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வனத்துறைக்கு செல்லும் 3 பாதைகளில் வனத்துறையினர் கோவில்பட்டி கோட்ட வனச்சரகர் சிவராம் தலைமையில் வாகனங்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். நெகிழி பொருள்கள், மதுபாட்டில் கொண்டு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினர். இப்பகுதியில் முக்கியமான ஒன்று இங்கிருந்த நீர் ஊற்றுதான். வறட்சியால் ஊற்றில் தண்ணீர் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக மக்களின் கூட்டம் அதிகரித்து வருவதால், பொது மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை மற்றும் சுகாதார வசதிகள் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். வனப்பகுதி மட்டும் வனத்துறையில் உள்ளது. மலைஅடிவார பகுதி மற்றும் கோவில்கள் இந்து அறநிலையத்துறையின் கீழ் இருப்பதால் அவர்கள் தான் இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறும் வனத்துறையினர் வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும், வனத்தினை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் நெகிழி மற்றும் மது ஆகியற்றை தவிர்த்து வனத்துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று
அறிவுறுத்தினர்.







Tags : Kovilpatti Gurumalai ,Pongal ,
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...