×

வேலூர் மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள் அமிர்தி வன உயிரியல் பூங்காவுக்கு 5000 பேர் வருகை

வேலூர், ஜன.18: காணும் பொங்கலையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் நேற்று காலை முதலே ஏராளமான மக்கள் திரண்டனர்.தமிழர் திருநாளான பொங்கல் திருநாள், தனக்கு வாழ்வளிக்கும் இயற்கையையும், கால்நடைகளையும் வணங்கும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் 3வது நாளான நேற்று காணும் பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. காலையில் குளித்து புத்தாடை அணிந்து பெரியவர்களிடம் ஆசி பெற்று அவர்களிடம் அன்பளிப்புகளை பெற்றனர்.அத்துடன், காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் சென்றனர். இதனால் கோயில்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏழைகளின் ஊட்டியான ஏலகிரியில் காலை முதலே மாவட்டத்தில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். வேலூர் கோட்டை, பெரியார் ஈ.வே.ரா பூங்கா, ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று மாலை வேலூர் கோட்டை பூங்காவில் ஏராளமானோர் குவிந்தனர். வேலூர் கோட்டை வளாகத்தில் அசம்பாவித சம்பவங்கள், குற்றச்சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.

அமிர்தி சிறு வனஉயிரியல் பூங்காவில் நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். வழக்கம் போல் சிறுவர்களுக்கு ₹5ம், பெரியவர்களுக்கு ₹10ம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. நேற்று மட்டும் அமிர்தியில் 5000க்கும் மேற்பட்டோர் வந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க சிசிடிவி மூலம் வனச்சரகர் சரவணன் கண்காணித்தார். மேலும் பிரச்னைகள் நிறைந்த பகுதிகளுக்கு வனத்துறையினரை அனுப்பி வைத்தார். அதேநேரத்தில் அமிர்தி நீர்விழ்ச்சிக்கு செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை.இதற்காக வனத்துறையினர் அங்கு தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.இதேபோல் மாவட்டத்தில் மோர்தானா, ஆண்டியப்பனூர் அணைகள், வள்ளிமலை, பாலமதி போன்ற இடங்களில் ஏராளமான மக்கள் திரண்டனர். பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் மொத்தம் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags : police personnel ,Vellore district ,
× RELATED முதல் ஐ.பி.எல் போட்டி: சேப்பாக்கம்...