×

சமத்துவ பொங்கல் விழா 25 அமெரிக்கர்கள் பங்கேற்பு

பெரம்பலூர், ஜன.11:   பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் சார்பாக நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் 25 அமெரிக்கர்கள் கலந்துகொண்டனர்.
அமெரிக்க கல்லூரியைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர்கள் 25 பேர் பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்லூரியில் சில தினங்களாக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா நடந்தது. அதில் கல்லூரியில் பயிற்சியளிக்கும் அமெரிக்கர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய வேளாண் வாகனமான மாட்டுவண்டியில் ஊர்வலமாக பள்ளி வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். வந்திருந்த அனைவரும் வேட்டி, சட்டை, சேலை அணிந்திருந்தனர்.பொங்கல் விழாவையொட்டி 5 பானைகளில் பொங்கல் படைக்கப்பட்டது. மேலும் உழவரின் சிறப்புக்கள் குறித்து விரிவாக அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. விழாவில் கிட்டிப்புல், கோலிக்குண்டு, தாயம், அஞ்சாங்கல்லு, பல்லாங்குழி உட்பட விளையாட்டுகள், உரல், அம்மி, ஆட்டுக்கல், திருவை, உலக்கு, குந்தானி போன்ற வீட்டின் சமையல் உபயோகத்திற்கான அக்கால இயந்திரங்கள், வளையல், தோடு, பொட்டு, மணி,நெத்திச்சுட்டி, ஒட்டியானம், காதுவளையம் போன்ற ஆபரணங்கள், பானை, மண் சட்டி, அடுப்பு, கரண்டி, வெண்கல பானை, செம்பு, ஈயப்பாத்திரம், இரும்பு கடாய் ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்வையிட்ட அமெரிக்கர்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு, வீட்டு உபயோகப் பொருட்கள், பெண்களின் அணிகலன்கள் பற்றி கேட்டறிந்தனர். பின்னர் பானை உடைத்தல், பாரம்பரிய நடனம், நாட்டுப்புறப்பாட்டு, கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கிறிஸ்டோபர், செயலாளர் மித்ரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : Equality Pongal Festival 25 Americans ,
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...