×

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்

ஈரோடு, ஜன.11 மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் நேற்று பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து 380 பேரை போலீசார் கைது செய்தனர்.மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் நேற்று ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடநதது. இந்த மறியல் போராட்டத்திற்கு ஏஐடியுசி., மாநில செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கி போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
 போராட்டத்தில் கட்டுமானம், அமைப்புசாரா உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், 58 வயது பூர்த்தியான அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும், தொகுப்பூதியம், காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் உள்ளிட்ட முறைகளை கைவிட்டு தொழிலாளர் பணி நிரந்தரப்படுத்தும் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், பணி ஓய்வுக்கு பிறகு வழங்கப்படும் பணிக்கொடை உச்சவரம்பை அதிகப்படுத்த வேண்டும், 110 நாட்கள் வேலைதிட்டத்தை உறுதிப்படுத்தி வேலைநாட்களை அதிகப்படுத்த வேண்டும், விவசாயிகளுக்காக சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

  ஆர்ப்பாடடத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் ஸ்ரீராம், எல்பிஎப் மாவட்ட கவுன்சில் செயலாளர் சுந்தரம், எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் சண்முகம், எஸ்டிடியூ சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஹசன்பாபு, மாவட்ட தலைவர் அப்துல்ரகுமான், மாவட்ட செயலாளர் தாவூத்அலி, கட்சியின் மாவட்ட செயலாளர் ஹசன்அலி, பொதுச்செயலாளர் லுக்மானுல் ஹக்கீம், எல்எல்எப் மாவட்ட அமைப்பாளர் வெற்றிச்செல்வன், காளியப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.     இதே போல் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து சத்தி மெயின்ரோட்டிற்கு வந்தனர். பின்பு அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 30 பெண்கள் உட்பட 380 பேரை போலீசார் கைது செய்தனர். சாலைமறியல் போராட்டத்தையொட்டி ஈரோடு டவுன் டி.எஸ்.பி.,ராதாகிருஷ்ணன் தலைமையில் 110க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.கொடுமுடி: அகில இந்திய வேலை நிறுத்தப்போராட்டம் கொடுமுடி வட்டக்கிளை சார்பில் நேற்று 11.00மணியளவில் கொடுமுடிதாலுகா அலுவலக முன்பு  நடந்தது. கொடுமுடி வட்ட தலைவர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் ஏசையன், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கைத்தமலை, மரியம் ஜோசப், செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில் வட்டச்செயலாளர் கண்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இறுதியில் சின்னசாமி ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் நன்றி கூறினார்.

Tags : protesters ,government ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...