×

உத்தமபாளையம் தாலுகாவில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் முறைகேடு கலெக்டர் கவனிப்பாரா?

உத்தமபாளையம், ஜன.11: உத்தமபாளையம் தாலுகாவில் பொங்கல் பரிசுபொருட்கள் வழங்கியதில் முறைகேடுகள் அதிகரித்தும். சிவில்சப்ளைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி சாலைமறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.உத்தமபாளையம் தாலுகாவில் உத்தமபாளையம், க.புதுப்பட்டி, கோம்பை, அனுமந்தன்பட்டி, கம்பம், காமயகவுண்டன்பட்டி, உள்ளிட்ட ஊர்களில் பொங்கல் பரிசு பொருட்கள் கடந்த 3 நாட்களாக வழங்கப்படுகிறது. தினந்தோறும் 300 நபர்களுக்கு பொங்கல் பொருட்கள் தரப்படும் என்ற அறிவிப்பு காற்றில் பறந்தது. இதேபோல் காலை 8.30 மணி முதல் பொருட்களை விநியோகம் செய்யவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் எங்குமே இது முறையாக பின்பற்றப்படவில்லை.
பல ரேஷன் கடைகள் உரிய நேரத்திற்கு திறக்கப்படவில்லை. அத்துடன் பொருட்கள் இல்லை என பொதுமக்களுக்கு கைவிரிப்பதுமாக அதிகம் நடந்தது. குறிப்பாக உத்தமபாளையம், க.புதுப்பட்டி, கோம்பை, உள்ளிட்ட ஊர்களில் ரூ.1000 பணம் மட்டுமே தந்த ஊழியர்கள் பொங்கல் பொருட்களான 1 கிலோ ஜீனி, பச்சரிசி, ஏலக்காய், கிஸ்முஸ், முந்திரிபருப்பு, கரும்பு உள்ளிட்டவை வழங்கவில்லை. அப்படியே வழங்கினாலும் இது எடைகுறைவாக பெயரளவில் பொட்டலம் போடப்பட்டு இருந்தது. நள்ளிரவு வரை மக்களின் இயலாமையை பயன்படுத்தி கொண்ட உத்தமபாளையம், க.புதுப்பட்டி, கோம்பை சொஸைட்டிகள் பொட்டலங்களை தராமலேயே பணத்தை மட்டுமே கொடுத்து அனுப்பிவிட்டனர்.இதனைப் பற்றிய புகா ர்கள் சென்றும், உத்தமபாளையம் சிவில்சப்ளைத்துறை துணைவட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் யாரும் முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அத்துடன் பொங்கல் பரிசு பணத்தை தருவதிலும் இழுபறி நிலையே காணப்பட்டது. பல சொஸைட்டிகளில் பணத்தை மட்டுமே கொடுத்து பொருட்களுக்கு டோக்கன் தருவதாக கூறி மக்களை இழுத்தடித்த நிலையும் காணப்பட்டது. எனவே,கலெக்டர் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட உடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

மறியலுக்கு முயற்சி
க.புதுப்பட்டி, கோம்பை உள்ளிட்ட ஊர்களில் பொங்கல் பரிசு கிடைக்காத ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலைகளுக்கு வந்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். முறைகேடுகளில் ஈடுபடக்கூடிய சொஸைட்டிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோஷமெழுப்பினர். ரூ.1000 பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு பொங்கல் பொருட்களை குறிப்பாக ஏலக்காய், முந்திரிபருப்பு, கிஸ்முஸ், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதில் தாலுகா அளவில் ரூ.பலலட்சம் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் கூறி உள்ளதால் உத்தமபாளையம் சிவில்சப்ளைத்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Collector ,taluk ,Pongal ,Uthamapalayam ,
× RELATED தாலுகா அலுவலகத்தில் திடீர் தீ; தீயணைப்பு துறையினர் அணைத்தனர்