×

புதுப்பாளையம் பகுதி ஆரணி ஆற்றில் சேதமடைந்த நிலையில் தரைப்பாலம்

ஊத்துக்கோட்டை, ஜன. 11: பெரியபாளையம் அருகே, புதுப்பாளையம் கிராமத்தில் சேதமான நிலையில் இருக்கும் தரைப்பாலத்தை  அகற்றிவிட்டு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று 10 கிராம மக்கள் அதிகாரிகளுக்கு  கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பெரியபாளையம்  அருகே மங்களம், ஆத்துமேடு, புதுப்பாளையம், காரணி, எருக்குவாய் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் காய்கறி, மளிகை  உள்பட பொருட்கள் வாங்கவும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆரணி பகுதிக்கு செல்லவும், புதுப்பாளையத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வழியாக தினமும் சென்று வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, பொன்னேரி, திருவள்ளூர்,  பெரியபாளையம், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும் படிப்பு, வேலை, வியாபாரம் போன்றவற்றுக்கும்  ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் மழைக்காலங்களில் ஆந்திராவில் உள்ள பிச்சாட்டூர் ஏரி நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவந்து நாகலாபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம்  வழியாக ஆரணி, பொன்னேரிக்கு  சென்று பழவேற்காடு கடலில் கலக்கும்.
இவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது புதுப்பாளையம் தரைப்பாலம் மூழ்கி விடும். அந்த நேரம், கிராம மக்கள் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றிக்கொண்டு பெரியபாளையம்  சென்று அங்கிருந்து தான் மற்ற பகுதிகளுக்கும்  செல்ல முடியும். இல்லாவிட்டால்,  படகு மூலம் ஆற்றை கடந்து பெரியபாளையம்-ஆரணி மெயின் ரோட்டிற்கு சென்று பின்னர் தாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு செல்வார்கள். இதற்கிடையே கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்  புதுபாளையம் தரைப்பாலம் மிகவும் சேதம் அடைந்துள்ளது.

 எனவே புதுப்பாளையம்  கிராமத்திற்கு அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள சேதமடைந்த பழைய தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதுகுறித்து  அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘புதுப்பாளையம், மங்களம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தில்  வசிக்கும் மக்கள் நெல், கரும்பு, பூ செடிகள் பயிர் செய்து வருகிறோம்.  மழைக்காலங்களில் நாங்கள் வெளியே  செல்ல முடியாமல் நீண்ட தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டி உள்ளது. அந்த நேரத்திற்கு மட்டும் தற்காலிகமாக படகு மூலம் செல்ல அரசாங்கம்  ஏற்பாடு செய்கிறது. ஆனால் நாங்கள் அந்த படகில் செல்லும்போது உயிரை  கையில் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டி உள்ளது.சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின்போது ஓட்டு கேட்டு வரும் எம்எல்ஏ., எம்.பி. வேட்பாளர்கள் பாலம்  கட்டி தருவதாக வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவுடன் மறந்து விடுகிறார்கள். மேலும் தற்போது வெற்றி  பெற்றுள்ள விஜயகுமார் எம்எல்ஏவிடமும் பாலம் கட்டுவது தொடர்பாக மனு கொடுத்துள்ளோம். அவர் இது குறித்து சட்டசபையில் பேசி நடவடிக்கை  எடுப்பதாக கூறியுள்ளார்’’   என்றனர்.


Tags : area ,river ,Arany ,
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...