×

கஜா புயல் நிவாரண பொருட்களுக்கு ரயில்வே சரக்கு கட்டண விலக்கு மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு

நாகர்கோவில், ஜன.11:  கஜா பாதித்த பகுதிக்கு ரயிலில் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களுக்கு மேலும் 15 நாட்களுக்கு சரக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதித்துறை மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்  அலுவலக செய்தி குறிப்பு:
கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்ல மேலும் 15 நாட்களுக்கு சரக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் கஜா புயலினால் பெரும் பாதிப்புக்குள்ளாகின. அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், உயிர் மற்றும் பொருட்ச்சேதங்களும் பெருமளவில்  ஏற்பட்டது.  புயல் பாதித்த 6 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய நிதித்துறை மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்.

மேலும் கப்பல் துறை மூலமாக 3 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை கஜா புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் வழங்கியதுடன் மத்திய அரசின் பிற துறைகள் மூலமும் நிவாரணம் வழங்கிட ஏற்பாடு செய்தார். இதனிடையே நெடுஞ்சாலை போக்கு வரத்து, விமானம் மற்றும் ரயில்வே துறை மூலம் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு  போக்குவரத்து சரக்கு கட்டணங்களை விலக்கிட கோரிக்கை வைத்ததை அடுத்து சம்மந்தப்பட்ட துறைகள் கட்டண விலக்கு அளித்தன. மேலும் கடந்த 07/01/2019ஆம் தேதி மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 12.09 கோடி மதிப்பிலான மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் குஜராத் மற்றும் பிற இடங்களிலிருந்து அனுப்புவதற்கு தயாராக இருப்பதாகவும், போக்குவரத்து சரக்கு கட்டணம் காரணமாக நிவாரணப் பொருட்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்த அவர், இன்னும் சில காலங்களுக்கு சரக்கு கட்டணத்தை விலக்கிட கோரிக்கை வைத்தார்.

அதையடுத்து ரயில்வே துறையின் மூலம் ஏற்கனவே சரக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டதற்கான உத்தரவு மேலும் 15 நாட்கள் தொடர்ந்திட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்து கொண்டார்.

Tags :
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை:...