×

பத்திர பதிவுத்துறை அலுவலகங்களில் 2 நாட்களாக இணையதள சேவை முடக்கம்

திருவிடைமருதூர், ஜன. 10: குடந்தை, நாச்சியார்கோவில் பத்திர பதிவுத்துறை அலுவலகங்களில் அடிக்கடி இணையதள சேவை முடங்கியது. இதனால் மணிக்கணக்கில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டி தரக்கூடிய துறைகளில் மிக முக்கியமானது பத்திரப்பதிவு துறையாகும். தமிழகத்தில் 578 பத்திர பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்கி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 49 பத்திர பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கும்பகோணம் மாவட்ட பதிவுத்துறை அலுவலகத்தின்கீழ் கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், நாச்சியார்கோயில், சுவாமிமலை, பாபநாசம், வலங்கைமான் என 7 சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த பத்திர பதிவுத்துறை அலுவலகங்களில்  நாள்தோறும் 10ல் இருந்து 50க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வீடு, காலிமனை, நிலம் உள்ளிட்டவை வாங்குவது, விற்பது, திருமணம், அடமான பத்திரம், பல்வேறு ஒப்பந்தங்கள் தினசரி பதிவு செய்யப்பட்டு வருகிறது. மாநகரம், நகரம், சிற்றூர் கிராமங்கள் என பகுதிக்கேற்ப பதிவுகளின் எண்ணிக்கை மாறுபடும். இந்நிலையில் சரியான இன்டர்நெட் வசதி, கணினி, ஜெனரேட்டர், யுபிஎஸ் உள்ளிட்ட எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல்   கடந்தாண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிட்டு செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏற்கனவே எளிதாக இருந்த பதிவுநிலை மாறி கடந்த ஓராண்டாக எழுதி கொடுப்பவரும், வாங்குபவரும், சாட்சிகளும் அவர்களுக்குரிய ஆதார், ஓட்டர் ஐடி உள்ளிட்ட ஆதாரங்களை ஸ்கேன் செய்து ஆவணங்களை இணையதளம் மூலம் பதிவு ஏற்றம் செய்ய வேண்டும்.

பத்திர பதிவுத்துறை அலுவலகத்துக்கு பொதுமக்கள் செல்லும்போது அங்கு இன்டர்நெட் இணைப்பு சரியாக கிடைக்காதநிலை ஏற்படுகிறது. மேலும் கணினி, மின்சாரம் உள்ளிட்டவை முறையாக இல்லாதபோது காலதாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பதிவுக்காக வருபவரும் பதிவுத்துறை அலுவலர்களும் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கும்பகோணம் மாவட்ட பதிவுத்துறை அலுவலகத்தில் இணையதள சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் பத்திரப்பதிவுக்காக வந்தவர்கள் காலை முதல் மாலை வரை காத்திருந்து திரும்பி சென்றனர். நாச்சியார்கோயில் சார்பதிவு அலுவலகத்திலும் இதே நிலை தான். இதேபோன்று கடந்த வாரத்தில் வலங்கைமானை தவிர்த்து மற்ற 6 பதிவுத்துறை அலுலகங்களிலும் ஒருநாள் முழுவதும் முடங்கியது. இதனால் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை உருவாகி வருகிறது. எனவே இணைதள சேவை முடங்கும் நேரங்களில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Registration Offices ,
× RELATED தேர்தல் பறக்கும் படை சோதனை எதிரொலி...