×

சேசுராஜபுரத்தில் பல்லவன் கிராம வங்கி புதிய கிளை ஐவிடிபி நிறுவனர் திறந்து வைத்தார்

கிருஷ்ணகிரி, ஜன.10: சேசுராஜபுரத்தில் பல்லவன் கிராம வங்கி புதிய கிளையை ஐவிடிபி நிறுவனர் திறந்து வைத்தார். கிராமப்புற மக்கள் நலனுக்காக, 15 மாவட்டங்களில் 289 கிளைகளுடன் பல்லவன் கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கி சேவை எட்டாத தொலைதூர கிராமங்களிலும், மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளிலும், இந்த வங்கி கிளைகளை துவக்கி, அனைத்து மக்களும் வங்கி சேவையை பெற துணையாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள தொலைதூர மலை கிராமமான நாட்றாம்பாளையம், ஆரோக்கியபுரம், மோட்ராகி, கெம்பகரை, கொடகரை, பலிகுண்டு மற்றும் மஞ்சுமலை ஆகிய மலை கிராமங்களில் வாழும் சுமார் 15 ஆயிரம் மலைவாழ் மக்கள், வங்கி சேவையை பெறும் வகையில், இந்த கிராமங்களின் மையப்பகுதியான சேசுராஜபுரத்தில், நாட்றாம்பாளையம் கிளை பல்லவன் கிராம வங்கி துவங்கப்பட்டது.

புதிய வங்கி கிளையின் துவக்க விழாவிற்கு, பல்லன் கிராம வங்கியின் பெருந்தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஐவிடிபி தொண்டு நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் பங்கேற்று, புதிய வங்கி கிளையை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து ஐவிடிபி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு கோடியே 10 லட்சம் வங்கி கடன் வழங்கப்பட்டது. இரண்டு நபர்களுக்கு தனிநபர் கடனாக ₹11 லட்சம் வழங்கப்பட்டது. புதியதாக துவங்கப்பட்ட இந்த கிளைக்கு ₹50 லட்சம் டெபாசிட் அளிப்பதாக ஐவிடிபி நிறுவனர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மண்டல மேலாளர் பாஸ்கரன், வங்கி கிளை மேலாளர்கள், ஐவிடிபி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags : founder ,IDPB ,branch ,Pallavan Grama Bank ,
× RELATED குற்றால அருவிக்கு வரும்...