×

சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் அவதி

சாத்தூர், ஜன. 10:சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர், சாக்கடை, தடுப்புச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.சாத்தூர் அருகேயுள்ளது ஒத்தையால் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 1200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தனி பஞ்சாயத்தான இக்கிராமத்தில் சாக்கடை செல்வதற்கு முறையான வாறுகால்கள் இல்லாமல் தெருக்களில் சாக்கடை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் அதிகளவில் உருவாகின்றன.
இக்கிராமத்தில் குடிநீர் தேவைக்காக 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் 9 போர்வெல்கள் இருந்தும் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சரிவர தண்ணீர் சப்ளை வழங்குவது இல்லை. ஒரு சில டேங்குகளில் ஒட்டைகள் வழியாக தண்ணீர் வீணாகின்றன. அதையும் பஞ்சாயத்து நிர்வாகம் கண்டுகொள்வது இல்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கிராமத்தில் உள்ள ஊருணியை தூர்வார வேண்டும். சுகாதார நிலையத்திற்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும். தெருக்களில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், வாறுகால் வசதி ஏற்படுத்த வேண்டும். கிராமத்தின் மையத்தில் உள்ள கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். தெரு மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி கூறுகையில், ‘பஞ்சாயத்து நிர்வாகத்திடம் எது கேட்டாலும் நிதிவசதியில்லை என கூறுகின்றனர். நாங்கள் புதிதாக எதையும் அமைத்துத்தர வேண்டும் என கேட்கவில்லை. இருப்பதை முறையாக பராமரிக்க வேண்டும் என கேட்கிறோம். அதற்கும் பஞ்சாயத்து நிர்வாகம் செவி சாயிப்பதுயில்லை’
என்றார்.

Tags : village ,facilities ,Sathur ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...