×

போலீஸ் முன்நடத்தை சரிபார்ப்பு இணையவழி சேவை அறிமுகம் எஸ்பி செல்வராஜ் துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை, ஜன.10: போலீஸ்  முன்நடத்தை சரிபார்ப்பு எனும் இணையவழி அறிமுகம் தொடக்க நிகழ்ச்சி நேற்று  புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த சேவையை தொடங்கி  வைத்த எஸ்பி செல்வராஜ் கூறியதாவது:  போலீஸ் முன்நடத்தை  சரிபார்ப்பு சேவை என்ற இணையவழி சேவையினை தமிழக போலீஸ் துறை  அறிமுகப்படுத்தியுள்ளது.  பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள்  இணையதளத்தின் வாயிலாக பல்வேறு சேவைகளுக்காக விண்ணப்பிக்கலாம். தனிநபர்  விபரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விவரம்  சரிபார்ப்பு, வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு,  போன்ற சேவையினை  பயன்படுத்தி கொள்ளலாம். இதில் தனிநபர் ஒரு விண்ணப்பத்திற்ககு ரூ.500 மற்றும்  தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.ஆயிரம் வீதமும் கட்டணம்  செலுத்த வேண்டும்.  இணையதளம் வழியாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு  மற்றும் இணைய வழி வங்க சேவை ஆகிய முறைகளில் ஏதேனும் ஒரு முறையினைப்  பயன்படுத்தி கட்டணத் தொகையினை செலுத்தலாம். போலீஸ் முன்நடத்தை சரிபார்ப்பு  சேவையின் முக்கிய நோக்கம்  விவர சரிபார்க்கப்பட வேண்டிய தனி நபர் ஒருவரின்  தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தமிழக போலீஸ் துறையின் வசம் உள்ள  ஆவணங்களின் அடிப்படையில் அந்த நபர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில்  ஈடுபட்டுள்ளாரா என்ற விவரம் சரிபார்க்கப்படும். தமிழகத்தில் வசிப்பவர்கள்  பற்றிய விவரங்கள் மட்டும் இச்சேவையின் மூலம் சரிபார்க்கபடும்.  விண்ணப்பம்  பெறப்பட்ட 15 நாட்களுக்குள் போலீஸ் முன்நடத்தை சரிபார்ப்பு பணி  முடிக்கப்படும்.  போலீஸ் முன்நடத்தை சரிபார்ப்பு சேவைக்காக பொதுமக்கள்  அல்லது தனியார் நிறுவனங்கள் போலீஸ் நிலையத்திற்கு நேரிடையாக செல்ல வேண்டிய  அவசியமில்லை.  

 பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போலீஸ் சரிபார்ப்பு  அறிக்கை பெறுவதற்காக இணையதளம் வழியாக விண்ணபித்து அதற்கான அறிக்கையினை  இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  மேலும் அந்த அறிக்கையின்  நகல் ஒன்று விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும்.   போலீஸ் சரிபாபர்ப்பு அறிக்கையிலுள்ள க்யூஆர் குறியீட்டினை ஸ்கேன் செய்தும்  அல்லது போலீஸ் சரிபார்ப்பு சேவையிலுள்ள சரிபார்ப்பு என்ற பகுதியின் மூலம்  இதன் நம்பகத்தன்மையினை சரிபார்த்து கொள்ளலாம்.  பிவிஆர் எண்ணைப்  பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பதாரர் விண்ணப்பத்தின் நிலை குறித்து  அறிந்து கொள்ளலாம்.  இச்சேவை தொடர்பாக எழும் வினாக்ககள் மற்றும் அதற்கான  விடைகளை எப்ஏக்யூ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. இந்த சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி  போலீஸ் முன்நடத்தை சரிபாபர்ப்பு சேவையில் பின்னூட்டம் என்ற பகுதியின்  பயன்படுத்தி விண்ணப்தாரர் இணையதளம் வழியாக புகார் அளிக்கலாம்.    பின்னூட்டமானது சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்பி, மாநகர ஆணையர்  மற்றும் சென்னை மாநகர டிசி11, ஐஎஸ் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிக்கு  தானியங்கி முறையில் உரிய நடவடிக்காக அனுப்பப்படும்.  விண்ணப்பத்தில்  அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால்  விண்ணப்பமானது நிராகரிக்கப்படும்.  அதற்காக செலுத்தப்பட்ட கட்டணத் தொகையும்  திருப்பி அளிக்கபடமாட்டாது.  மேலும் போலீஸ் துறைக்கு தவறான விவரங்கள்  அளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Introduction ,Police Preliminary Examination Internet Service ,SB Selvaraj ,
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...