×

போலீசாரிடம் நன்னடத்தை சான்று பெற இணைய சேவை எஸ்பி துவக்கி வைத்தார்

திருவாரூர், ஜன. 10:  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் போலீசாரிடம் நன்னடத்தை சான்று பெறுவதற்கு எஸ்.பி அலுவலகத்தில் இணைய சேவையை எஸ.பி துரை துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் போலீசாரின் நன்னடத்தை சான்று பெறுவதற்கான இணைய சேவை முறையினை நேற்று எஸ்.பி அலுவலகத்தில் எஸ.பி துரை துவக்கி வைத்து பேசியதாவது, பொது மக்களின் நன்நடத்தை சரிபார்ப்பு செய்யும் சேவையை  இணையவழி மூலம் தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள்  www.eservice.tn.police.gov.in    என்ற இணையதளத்தின் வாயிலாக தனிநபர் விபரம், வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விபரம் சரிபார்ப்பு, வீட்டு வேலை ஆட்கள் விபரம் சரிபார்ப்பு ஆகிய சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  மேலும் இந்த சேவையை பயன்படுத்துவதற்கு  தனிநபராக இருந்தால் விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.500ம் , தனியார் நிறுவனங்களாக இருந்தால் ரூ.ஆயிரமும் - கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் இணையவழி வங்கி சேவை முறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி இந்த கட்டணத்தொகையை செலுத்தலாம்.

 அதன் பின்னர்  தமிழக காவல்துறையில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் இச்சேவையின் மூலம் சரிபார்க்கப்படும். இதில் விபரம் சரிபார்க்கப்படவேண்டிய நபர் ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளவரா என்ற விபரம் சரிபார்க்கப்பட்டு  விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் நன்நடத்தை சரிபார்ப்பு பணி முடிக்கப்படும். இந்த சேவையின் மூலம்  பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் காவல் நிலையத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.



Tags : SSP ,
× RELATED காரைக்கால் கடற்கரையில் காவல்நிலைய பூத் அமைக்கும் பணி