×

5,816 மாணவர்களுக்கு கற்கும் திறன் குறைவு

புதுச்சேரி, ஜன. 10: சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் புதுவையில்  குறைவான கற்கும் திறன் கொண்ட 5816 மாணவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சிறப்பு கற்றல் கருவிகள் ரூ.27.62 லட்சம் செலவில் வாங்கப்பட்டு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.நம் நாட்டு கல்வி முறையில், எழுத்து தேர்வுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். படிக்கவும், எழுதவும் மிகவும் சிரமப்படும் குழந்தைகள் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இது ஒரு கற்றல் குறைபாடுதான்.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்க சிரமப்படுவார்கள். புத்தகத்தில் வார்த்தைகள் தெரிந்தாலும், அதற்கான அர்த்தங்கள் புரிந்தாலும் அதனை சரியாக வெளிப்படுத்த தெரியாது. ஆங்கில எழுத்துக்களோ, தமிழ் எழுத்துக்களோ நன்றாகவே தெரியும். அந்த எழுத்துக்களைப் படித்து உள்வாங்கும் திறன் மிக குறைவாக இருக்கும்.

டிஸ்லெக்சியா பாதிப்புள்ள குழந்தைகள் பேப்பரில் எதுவுமே எழுத மாட்டார்கள். கேள்வித்தாளை வாசித்துக் கேட்டால், அதற்கான பதில்களை சரியாகச் சொல்வார்கள். கணக்குப் போடுவதில் தடுமாற்றம் இருக்கும். தெளிவான ஹேண்ட் ரைட்டிங் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இதுமாதிரியான அறிகுறிகள் இருக்கும்.  இரண்டரை வயதில், எழுத்துக்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போதே பிரச்னை இருப்பதை ஓரளவுக்கு நம்மால் கண்டுபிடிக்க முடியும்.  ஒரு வார்த்தையை எழுதி, இது என்ன என்று கேட்டால் எழுத்துக்கள் பற்றிய அறிவு இருந்தாலும், அந்த குழந்தையால் வார்த்தையாக சொல்ல முடியாது.  அப்படியே கவனிக்காமல் விட்டுவிட்டால், வளர்ந்ததும், புத்தகத்தில் இருப்பதைப் படிக்கவும் சிரமப்படுவார்கள்.குழந்தையின் இதுபோன்ற கஷ்டங்களை பெற்றோர் உன்னிப்பாக கவனித்தாலே கண்டுபிடித்துவிடலாம். டிஸ்லெக்சியா என்பது குறிப்பிட்ட செயலை செய்யமுடியாமல் போகும் பிரச்னையே தவிர, நோய் கிடையாது.

ஆனால் அந்தப் பிரச்னையைச் சமாளித்து வெளியே வருவதற்கான மாற்று வழிகளை கண்டுபிடித்துவிட்டால், இயல்பான வாழ்க்கையை வாழமுடியும்.  குழந்தை நல மருத்துவர், கிளினிக்கல் சைக்கலாஜிஸ்ட் அல்லது சைல்டு சைக்கியாட்ரிஸ்ட்டால் மட்டுமே துல்லியமாக கண்டறிய முடியும்.குழந்தைக்கு டிஸ்லெக்சியா என உறுதியானால், சிறப்பு கல்வியாளர்கள் உதவியோடு அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளை செய்ய முடியும். அதிலிருந்து மீண்டவர்கள் மற்ற குழந்தைகளைவிட தனித்தன்மையோடு, சாதனை படைப்பவர்களாக இருப்பார்கள். புதுச்சேரியில் கற்றல் குறைபாடு உடைய மாணவர்களை கண்டறிந்து சிறப்பு பயிற்சி, உளவியல் சிகிச்சை அளிக்க வேண்டுமென கல்வியமைச்சர் கமலக்கண்ணன், கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர்  வீரராகவன் கோரிக்கை மனு அனுப்பினார். இதற்கிடையே இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கல்வித்துறையின் சமக்ரா சிக்ஷா அபியான் திட்ட அதிகாரி மொஹிந்தர்பால் விளக்கமளித்துள்ளார். அதில் அனைத்து வட்டார வள மையங்கள் மூலமாக கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளை கண்டறிந்து, சமக்ரா சிக்ஷா அபியான் மூலம் தேவையான உதவிகளை ெசய்ய கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி காரைக்கால் மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் 159 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளை கண்டறியும் வகையில் வட்டார வள மையம் மூலமாக பெற்றோருக்கு இது தொடர்பான விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. இதன்வழியாக குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்படுகிறது.
டிஸ்லெக்சியா குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலமாகவும், அரபிந்தோ சொசைட்டி மூலமாக  தனிப்பட்ட கல்வி திட்டத்தினால் மனவலிமையை அதிகப்படுத்தி மீட்டெடுக்கப்படுகிறார்கள். 2018-2019ம் ஆண்டில் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் குறைவான கற்கும் திறன் கொண்ட 5816 மாணவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சிறப்பு கற்றல் கருவிகள் ரூ. 27.62 லட்சம் செலவில் வாங்கப்பட்டு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.அதேபோன்று கற்றல் குறைபாடு உடைய ஒரு குழந்தைக்கு ரூ.475  வீதம் சிறப்பு வகுப்புகளுக்கு செலவிடப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...