×

தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் காட்சி பொருளான உயர்கோபுர மின்விளக்கு

ஊத்துக்கோட்டை, ஜன.10: பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் கடந்த 6 மாதங்களாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையை சுற்றி பாகல்மேடு, புன்னப்பாக்கம், செம்பேடு, காரணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் அனைவரும் வியாபாரம், வேலை சம்மந்தமாகவும், பள்ளி கல்லூரிகளுக்கும் தாமரைப்பாக்கம் கூட்டுசாலைக்கு வந்து அங்கிருந்து திருவள்ளூர், ஆவடி, செங்குன்றம், பெரியபாளையம் ஆகிய பகுதிகளுக்கு செல்வார்கள்.மீண்டும் மாலை தாமரைப்பாக்கத்திற்கு வந்து கூட்டுசாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்து கிராமங்களுக்கு பஸ் மூலம் செல்வார்கள். இதில், அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படும். இதனால் செயின் பறிப்பு, திருட்டு போன்றவைகளும் நடைபெற்று வந்தது. மேலும் அங்குள்ள கடைகளிலும் திருட்டு நடந்ததுள்ளது. இதை தவிர்க்க தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் உள்ள நான்கு முனை சந்திப்பின் மையப்பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என மக்கள் அப்போதைய எம்.பி.(திமுக) ஆ.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன் படி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை ஒதுக்கி 8 விளக்குகள் கொண்ட உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த உயர் கோபுர மின் விளக்கு கடந்த 6 மாதங்களாக எரியவில்லை. இதனால், பஸ் நிறுத்தம் பகுதியில் மீண்டும் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த 6 மாதங்களாக உயர் கோபுர மின் விளக்குகள் எரியவில்லை,  இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதி வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்து விடுகிறது. இது வழிப்பறி கொள்ளையர்களுக்கு சாதகமாக உள்ளது. இதனால், பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த உயர்கோபுர மின் விளக்கை  சீரமைக்க வேண்டும் என கூறினர்.

Tags : bathrooms ,
× RELATED ஊரக வேலை திட்டத்தில் பள்ளிகளில் 1000 கழிவறைகள் கட்டும் பணி