×

கும்மிடிப்பூண்டி அருகே பூவலையில் ஆக்கிரமிப்பு சுடுகாட்டை மீட்க பழங்குடியினர் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி, ஜன.10: கும்மிடிப்பூண்டி அருகே பூவலை ஊராட்சியில் உள்ள இருளர் இன மக்களின் சுடுகாடு இடத்தை ஆக்கிரமித்து மாந்தோப்பு அமைத்துள்ளனர். அந்த இடத்தை மீட்டுத்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த 100 குடும்பத்தினர் 50 வருடங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என  சுமார் 20 சென்ட் நிலத்தில் சுடுகாடு உள்ளது. அதற்கு சென்றுவர 6 அடி அகலத்தில் பாதையும் உள்ளது.இந்நிலையில், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு  இந்த சுடுகாட்டை சுற்றியுள்ள நிலத்தை வாங்கி  மின்வேலி அமைத்துள்ளனர். மேலும், பாதையையும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், சுடுகாட்டுக்கு செல்ல வழியின்றி அவர்கள் தவித்து வருகின்றனர். இதற்கிடையே  தனிநபர்கள் சிலர் சுடுகாட்டை ஆக்கிரமித்து மாமரம் வளர்த்து வருகின்றனர். இதனால், இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யவோ அல்லது எரிக்கவோ முடியாமல் இருளர் இனத்தவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த இருளர்கள்  வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியுள்ள சுடுகாடு மற்றும் பாதையை மீட்க ஆவன செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பூவலை பகுதி இருளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Tribes ,cemetery ,Gummidipoondi ,Poolevi ,
× RELATED சிப்காட்டிற்கு இடம் ஒதுக்கியதை...