×

திருத்தணி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்தணி, ஜன.10: திருத்தணி அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்  நடத்தினர். அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை வைத்தனர்.திருத்தணி அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தனர். பின்னர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலர் தினேஷ் தலைமை வகித்தார். இதில் மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் போலீசார் நுழைவதை தடுக்க வேண்டும். கல்லூரியில் காலியாக உள்ள பேராசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.  கல்லூரி வழியாக செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும், கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி  கோஷம் எழுப்பினர். அவர்களிடம் கல்லூரி முதல்வர் ஜெயச்சந்திரன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்,  கோரிக்கைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என மாணவர்களிடம் உறுதி அளித்தார். இதை ஏற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.  50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Tiruttani ,Government College ,
× RELATED கோணம் அரசு பொறியியல் கல்லூரியில்...