×

செங்கம் அருகே லாரியின் 15 டயர்கள் பஞ்சர் பெருமாள் சிலை பெங்களூரு கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் 18 கி.மீ. குண்டும், குழியுமான சாலைகளால் பெரும் சவால்

செங்கம், ஜன.10: செங்கம் அருகே லாரியின் 15 டயர்கள் பஞ்சரானதால், பெங்களூரு கொண்டு செல்லப்படும் பெருமாள் சிலை பயணத்தில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே செங்கம் செல்லும் 18 கி.மீ. சாலையானது, குண்டும், குழியுமாக உள்ளதால் அதனை கடந்து செல்வது பெரும் சவாலாக இருக்கும் என தெரிகிறது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடையுள்ள பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனும் இடத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட முழுமையாக செதுக்கி முடிக்கப்படாத பிரமாண்ட பெருமாள் சிலை, 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது.

இதையொட்டி, கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 7ம் தேதி சிலையின் பயணம் தொடங்கியது. பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு திருவண்ணாமலை வந்த பெருமாள் சிலை, நேற்று முன்தினம் கிரிவலப்பாதையில் இருந்து திண்டிவனம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக செங்கம் நோக்கி சென்றது. இரவு 7 மணியளவில் செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சிலை வந்தடைந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட பெருமாள் சிலையை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் அம்மாபாளையத்தில் இருந்து சிலை புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. அப்போது, லாரியில் பொருத்தப்பட்டுள்ள 240 டயர்களில் 15 டயர்கள் திடீரென பஞ்சரானது. இதற்கான மாற்று டயர்கள் அகமதாபத்தில் இருந்து சென்னை வந்து, அங்கிருந்து எடுத்துவர வேண்டி உள்ளது. எனவே, இந்த டயர்கள் இன்று அம்மாபாளையம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவற்றை லாரியில் பொருத்திய பிறகுதான் மீண்டும் சிலை பயணம் தொடரும்.

இதையடுத்து, இந்த சிலை கோணான்குட்டை கேட், கரியமங்கலம், கொட்டக்குளம், மண்மலை கிராமங்கள் வழியாக செங்கம் செல்ல வேண்டி உள்ளது. ஏற்கனவே வந்தவாசியில் இருந்து பெருமாள் சிலையுடன் புறப்பட்ட லாரியின் டயர்கள், திருவண்ணாமலை வருவதற்குள் பல்வேறு இடங்களில் பஞ்சரானது. தற்போது அம்மாபாளையத்தில் இருந்து செங்கம் இடையே உள்ள 18 கி.மீ. சாலையானது குண்டும், குழியமாகவும், மண் சாலையாகவும் உள்ளது. 3 இடங்களில் வேகத்தடை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த சாலையை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆனால் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பெருமாள் சிலை இந்த 18 கி.மீ. தூரத்தை கடந்து செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தெரிகிறது.

Tags : idol ,Chengam ,Bengaluru Perumal ,tunnel roads ,
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது