×

பொங்கல் தொகுப்பு வழங்காததால் ரேஷன் கடை முற்றுகை

திருப்பூர், ஜன. 9:  திருப்பூரில், ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்காததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து, அரண்மனைப்புதூர் பொதுமக்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 6ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ரேஷன் கடை எண் 924ல் கடந்த இரண்டு நாட்களாக பொங்கல் தொகுப்பு வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால், வேலைக்கு செல்ல முடியாமல் கூலியை இழந்துள்ளோம். இதுகுறித்து, நேற்று முன்தினம் ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்ட போது, இன்னும் கரும்பு உட்பட பொங்கல் பொருட்கள் முழுமையாக வரவில்லை என்றனர். இதேபோல் நேற்றும் பொருட்கள் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.  இதனால் தொடர்ச்சியாக 2 நாட்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கூறினர். இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது: இக்கடையில், மொத்தம் 1000 குடும்ப அட்டைகள் உள்ளது. கிடங்கில் இருந்து பொங்கல் பொருட்கள் நேற்று முன்தினம் தான் வந்தது. அவைகளை பார்சல் செய்துள்ளோம். ஆனால், கரும்பு இன்னும் வராததால் பொருட்களை விநியோகம் செய்ய முடியவில்லை. கரும்பு வந்ததும் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். மேலும், இக்கடைக்கு மின் இணைப்பும் தற்போது இல்லை. ஆதலால், எடை போட முடியாத நிலையும் உள்ளது, என்றனர்.


Tags : Pongal ,Ration Shop Siege ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா