×

வேடந்தாங்கல் ஊராட்சியில் நிரந்தரமாக கால்நடை மருத்துவர் நியமிக்க வேண்டும்

சென்னை, ஜன.9: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மதுராந்தகம் தொகுதி க.புகழேந்தி (திமுக) பேசியதாவது:  மதுராந்தகம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் உலக புகழ் பெற்ற வேடந்தாங்கலில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். வேடந்தாங்கல் அருகில் கருக்கிளி, வெள்ளப்புத்தூர் ஊராட்சி, தண்டரை புதுச்சேரி ஊராட்சி ஆகிய பகுதிகளில் 25,000க்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். குறிப்பாக 25,000க்கும் மேற்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களும், இருளர் எனும் பழங்குடியின இனத்தை சார்ந்த மக்களும் வசிக்கிறார்கள். இங்கு 5000க்கும் மேற்பட்ட ஆடுகள், மாடுகளை வளர்க்கிறார்கள்.

கால்நடைகளை பராமரிக்கக்கூடிய அந்த ஊர் மக்கள், பால் சொசைட்டி அமைத்து அதன் மூலம் அரசுக்கு பால் கொடுக்கிறார்கள். எனவே, அந்த ஊராட்சிகளை மையப்படுத்தி வேடந்தாங்கலில் கால்நடை மருத்துவமனை இல்லை. அங்குள்ள பகுதிநேர மருத்துவமனைக்கு வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள்தான் கால்நடை மருத்துவர் வருகிறார். நிரந்தர மருத்துவர் அங்கே இல்லை. கால்நடை மருத்துவமனைக்கு சொந்தஇடமும் இல்லை. வேடந்தாங்கல் ஊராட்சிக்கு  அருகில் உள்ள ஒரு அறையில் கால்நடை மருத்துவரை வரவழைத்து பயன்படுத்துகிறார்கள். எனவே, நிரந்தர கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்: உறுப்பினர் கோரிக்கையினை பரிசீலித்து, அங்கே அரசு துறை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து தேவைப்படும் என்றால், அங்கு கால்நடை மருத்துவமனை அமைக்க ஆவன செய்யப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : Vedanthangal ,village ,veterinarian ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...